கொரோனா வைரஸ் ஐரோப்பா கண்டம் பூராவும் தொடர்ந்து வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. அந்த கண்டத்தில் புதன்கிழமை மாலை வரையில் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை தாண்டியிருக்கிறது. இது  உலகளாவிய ரீதியில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் அரைவாசியாகும்.

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை செவ்வாயன்று மாலை 4 இலட்சத்தை தாண்டியதாகவும் இதுவரையில்  17,454 பேர் மரணமடைந்ததாகவும் கொவிட்-19 வைரஸ் பரவலை கண்காணித்துவரும் அமெரிக்காவின் ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.

ஐரோப்பாவில் கொரோனாவைரஸின் தொற்றுக்குள்ளாகியதாக உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்து நாட்களில் ஒரு இலட்சத்தில் இருந்து 2 இலட்சத்துக்கு பாய்ந்தது. இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளே ஐரோப்பா கண்டத்தில் கொரோனாவைரஸினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நான்கு நாடுகளாக தொடர்ந்து விளங்குகின்றன. இந்த நான்கு நாடுகளிலும் மொத்தமாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 150,000 ஐ எட்டியிருக்கிறது.

இத்தாலியில் வைரஸ் மீண்டும் வேகம் 

இத்தாலியில் புதிதாக  தொற்றுக்குள்ளாகியவர்களினதும் பலியானவர்களினதும் எண்ணிக்கையில் செவ்வாயன்று ஒரு பெரிய பாய்ச்சல் ஏற்பட்டது.சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைவர் அஞ்சலோ பொறெல்லி தினமும் நடத்திவருகின்ற கிரமமான செய்தியாளர் மகாநாட்டில் வைத்து  செவ்வாய்க்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5,249 என்றும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 743 என்று அறிவித்தார்.

இத்தாலியில் சில தினங்களாக புதிதாக தொற்றுக்குள்ளாகுபவர்களின் எண்ணிக்கையில் தினமும் ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுவந்தது. ஆனால், இந்தப் போக்கு திடீரென்று மறுதலையாகியது. திங்களன்று புதிய தொற்றின் எண்ணிக்கை 4,789 ஆக இருந்தது. இது செவ்வாயன்று 5249 ஆக அதிகரித்தது. ஞாயிறன்று மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை  602 ஆக இருந்தது. திங்களன்று 650 பேர் மரணமடைந்தார்கள். முதன்முதலாக வடக்கு இத்தாலியில் பெப்ரவரி 21 கொரேனாவைரஸ் தொற்று ஏற்பட ஆரம்பித்த பிறகு  கடந்த சனிக்கிழமையே ஆகக் கூடுதலானவர்கள் (793) மரணமடைந்தார்கள். திங்களன்று இடம்பெற்ற மரணங்கள் (650) ஒரே நாளில் கூடுதல் எண்ணிக்கையானவர்கள் பலியான இரண்டாவது நிகழ்வாக அமைந்தது. 

இத்தாலியில் செவ்வாய்கிழமை மாலை வரையில் கொரோனாவைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 69, 176 ஆகும். இது சீனாவுக்கு வெளியே அதிகூடுதல் எண்ணிக்கையான மரணங்களாக இருக்கின்றன. அதேவேளை, உத்தியோகபூர்வ தரவுகளின்படி இத்தாலியில் தற்போது கொரேனாவைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 54,030 ஆகும்.