(ஆர்.யசி)

மக்களின் அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது, அத்துடன் மருத்துவ பொருட்களும் குறைந்த விலையில் வழங்க அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்களை கூட்டங்கூட விடாது வீடுகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கும் மாற்று வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றது. 

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட காலகட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள வழங்கப்படுகின்ற ஊரடங்கு சட்ட தளர்வு காலகட்டத்தில் அதிக நெருக்கடிகள் ஏற்படுவதாகவும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்த தன்மை காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்ற நிலையில் அது குறித்து அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கையில் அமைச்சர் சமல் ராஜபக் ஷ இவற்றை கூறினார். அவர் மேலும் கூறுகையில், 

அரிசி, மற்றும் மரக்கறி ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்படும் எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை. அத்துடன் மருத்துவ பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது நாட்டு மக்கள் அனைவரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்ற கால கட்டத்தில் மக்களுக்கான சலுகைகளை வழங்கவே அரசாங்கம் முழுமையாக முயற்சிக்கின்றது. அதற்கான அரிசி மற்றும் தானி விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்தி குறைந்த விலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குமாறு வலியுறுத்தியுள்ளோம்.

மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கு சட்ட கால எல்லை நீட்டிக்கப்படும் நிலைமை உள்ளதால் அதற்கேற்ற வகையில் நுகர்வுப் பொருட்களை மக்களின் வீடுகளுக்கு வழங்கும் மாற்று வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய ஒவ்வொரு மாகாண, மாவட்ட. பிரதேச அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம். மக்களை கூட்டங்கூட இடமளிக்கக்கூடாது என்பதை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றோம். மக்களும் அரசாங்க மற்றும் மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுமாறு வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.