நாம் தற்போது கண்ணுக்கு தெரியாத கிருமியுடன் யுத்தம் செய்து வருகின்றோம் என தெரிவித்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ் இதில் நாம் வெற்றிகொள்ள மக்கள் அரசின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் அவர் இன்று (24.03.2020) நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாடு தற்போது பாரிய சவாலை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றது. கண்ணுக்கு தெரியாத கிருமியுடன் நாம் யுத்தம் செய்து வருகின்றோம்.

இதில் நாம் வெற்றி கொள்ள அரசின் அறிவுறுத்தல்கள் அனைத்தையும் பின்பற்றி பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். நாட்டில் சமய,சமூக,அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம். அரச நிர்வாகத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கத்தினை எமது நாடு மட்டுமல்ல உலகமே எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறான நிலையில் எமது நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் உலக நாடுகள் எமக்கு நேசக்கரம் நீட்டாது. எம்மிடம் உள்ள வளங்களையே நாம் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.

வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வறுமை கோட்டுக்கு உள்ளானவர்களுக்கு என ஐம்பது மெற்றிக் தொன் கோதுமை மா முதற்கட்டமாக கிடைத்துள்ளது.

இதனை வடக்கின் ஐந்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருந்து பொருட்களை அந்தந்த கிராமங்களில் உள்ள மருந்தகங்கள் மக்களுக்காக வீடுகளுக்கு கொண்டு சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.