(எம்.மனோசித்ரா)

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அதிகூடிய அவதான மட்டத்திலுள்ள மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இம் மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நடைமுறையிலிருக்கும் என்பதோடு, இங்கு அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய சதொச, கீல்ஸ், ஃபுட் சிட்டி, ஆர்.பி.கோ, அரலிய உள்ளிட்ட பல்பொருள் அங்காடிகள் மற்றும் லாஃப் எரிவாயு சிலிண்டர் என்பவற்றுக்கு வீடுகளுக்கு பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பஷில் ராஜபக்ச தலைமையில் செலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாவட்ட அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகள் இந்த செயலணயில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாவட்டங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள்  எரிவாயு சிலிண்டர், மருந்துகள் உள்ளிட்டவற்றை தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் பஷில் ராஜபக்ச தலைமையிலான செயலணி மூலம் முன்னெடுக்கப்படும்.

லொறி, வேன், முச்சக்கரவண்டி உள்ளிட்டவற்றில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.