கொவிட் -19 புதிய  கொரோனாவைரஸ் பரவலைப் பொறுத்தவரை, அதன் தொடக்கமையமாக விளங்கிய வூஹான் நகரம் உட்பட சீனா பூராவும்  மார்ச் 18 - 20 ஒருவருக்கு கூட புதிதாக தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒரு மறுதலை மாற்றமாகும். வூஹானில் முதல் வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு இவ்வாறு நடந்திருக்கிறது.

 ஆனால், மார்ச் 21 குவாண்டொங் மாகாணத்தில் உள்ளூர்வாசியொருவருக்கு வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவரிடமிருந்து வைரஸ் தொற்று ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மார்ச் 22 மட்டில் 314 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் சீனா அறிவித்தது.

உள்நாட்டில் வைரஸ் தொற்றுக்கு புதிதாக இலக்காகக்கூடியவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்பதை சனிக்கிழமை நிகழ்வு காண்பிக்கின்ற நிலையில், தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தொற்று பூச்சியமாக இருந்தது என்பது எதிர்பாராத ஒரு தற்காலிக விலகலேயாகும்.வைரஸ் பரவலின் உச்சக்கட்டத்தில், சீனப் பெருநிலப்பரப்பில் தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுவந்ததாகவும் நூற்றுக்கணக்கானவர்கள் மரணமடைந்துகொண்டிருந்ததாகவும் ( தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 81,014 ஐ எட்டுவதற்கு முன்னதாக )  அறிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை மார்ச் 22 மட்டிலான உலக தொற்று எண்ணிக்கையான  3,16,659 இன் சுமார் 26 சதவீதமாகும்.

சீனப் பெருநிலப்பரப்பில் கொரோனாவைரஸுக்கு பலியானவர்களின் மொத்த  எண்ணிக்கை 3,237 ஆகும். இது இத்தாலியில் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்ட மரணங்களின் எண்ணிக்கையையும் (4,825) விட குறைவானதாகும்.

வூஹானில் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சகல நோயாளிகளும் குணமடைந்து புதிதாக நோயாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற பிறகு அந்த வைத்தியசாலை மார்ச் முற்பகுதியில் மூடப்பட்டபோது வைரஸ் தொற்று அருகிக்கொண்டுபோகிறது என்பதற்கான -- தெளிவான  -- ஆரம்ப அறிகுறிகள் தென்படத்தொடங்கின. கொரோனாவைரஸ்  ஐரோப்பாவில் உச்சவேகத்தில் சவாரிசெய்துகொண்டிருந்ததுடன் அமெரிக்காவிலும் பரவிய ஒரு நேரத்தில் சீனாவில் இந்த மறுதலை மாற்றம் நிகழ்ந்தது.

 ஜனவரி 23 வூஹானையும் வேறு ஒரு சில நகரங்களையும் சீனா மூடியது.அடுத்து வந்த நாட்களில் பல நகரங்கள் மூடப்பட்டன.இதனால் சுமார் 6 கோடி மக்கள் முடக்கப்பட்டனர். இந்த கடுமையான நடவடிக்கைகள் சீனாவுக்குள்ளும் மேற்கொண்டு உலகின் எஞ்சிய பகுதிகளுக்கும் மிகவும் விரைவாக பரவுகின்ற வாய்ப்பை கடுமையாகக் குறைத்தன.இதனால் வைரஸ் ஆழக்கால் ஊன்றுவதைத் தடுத்துநிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தேவையாக இருந்த காலஅவகாசம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் கிடைத்தது.ஆனால், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் அதை வீணாக்கிவிட்டன.

சீனாவுக்கு வெளியே செய்யமுடியாதது  என்று முன்னர் கருதப்பட்ட காரியம் -- அதாவது முழு நாட்டையும் மூடுவது -- இப்போது இத்தாலியில் செய்துகாட்டப்பட்டிருக்கிறது.

தனிநபர்களின் உரிமைகளையும் விட சமுதாயத்தின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல நாடுகள்  --வைரஸ் தொற்று சங்கிலியை துண்டிக்கும் முயற்சியாக--  சீனாவில் கடைப்பிடிக்கப்பட்டதைப் போன்ற ( பயணக்கட்டுப்பாடுகள், மக்கள் ஒன்றுகூடுவதை தடைசெய்தல், முக்கியமான நிகழ்வுகளை ரத்துச்செய்தல், கல்வி நிறுவனங்களையும் பொழுதுபோக்கு அரங்குகளையும் மூடுதல் ) கடுமையான நடவடிக்கைகளை கடைப்பிடித்துவருகின்றன.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் சீனாவின் வெற்றி முக்கிய கவனத்துக்குரியதாக இருக்கின்றபோதிலும்,  ஜனவரி நடுப்பகுதி வரை-- அதாவது முதலில் சிலருக்கு தொற்று ஏற்பட்டு சுமார் ஒரு மாதம் கடந்துபோகும்வரை -- வைரஸ் பரவலை மூடிமறைத்த சீனாவின் செயல் அழித்துவிடமுடியாத கறையாகவே நிலைத்திருக்கும்.2019 டிசம்பர் 31 ஒரு திரள் தொற்று குறித்து உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு அறிவித்த பின்னரும் கூட சீனா அதன் மக்களுக்கு அறிவிக்க மறுத்தமையும் முதலில் இந்த புதிய வைரஸ் குறித்து அபாய அறிவிப்புச் செய்த டாக்டர்களின் வாயை அடைத்தமையும் படுமோசமான காரியங்களாகும். 2002 சார்ஸ் நோய் பரவலுக்குப் பிறகுகூட சீனாவில் நிலைவரங்கள் மாறவில்லை என்பதையே இது வெளிக்காட்டுகிறது.

2002 சார்ஸ் பரவலின்போது செய்தததைப் போன்று அல்லாமல் இத்தடவை புதிய வைரஸ் குறித்து  உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு அறிவிப்பதற்கு அநாவசியமாக தாமதிக்காமல் சீனா நடந்துகொண்டமை மாத்திரமே ஆறுதல் தருகின்ற ஒரு விடயமாகும். அத்துடன்,வைரஸின் முழுமையான மரபணுத்தொகுதியை விரைவாகவே கண்டறிந்து உலக சுகாதார ஸ்தாபனத்துக்கு அறிவித்த பிறகு தரவுகளை சீனா பகிரங்கப்படுத்தியது. அதற்கு பிறகு 126 வைரஸ் மரபணு தொகுதிகளை சீனா பகிர்ந்துகொண்டது. சீனாவின் ஆராய்ச்சியாளர்களினால் வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆவணங்கள்  உலகம் பூராவுமுள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த வைரஸையும் அதன் விளைவான நோயையும் விரைவாகவே  விளங்கிக்கொள்வதற்கு வாய்ப்பைக்கொடுத்தன.

( த இந்து )