கொவிட் -- 19 கொரோனாவைரஸ் பரவல் ஆபத்து எதிர்நோக்கப்படும் இன்றைய காலகட்டத்தில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உயர் கொலஸ்ரரோல், இருதய நோய்கள், பக்கவாதம், தைரோயிட், நாள்பட்ட சுவாசப்பிரச்சினைகள், ஈரல் வருத்தங்கள்  போன்ற தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டு ஏற்கெனவே சிகிச்சை பெற்றுவருகின்றவர்கள்  கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சு வழங்கியிருக்கும் ஆலோசனைகள் வருமாறு ;

(1) மருத்துவர்களினால் ஏற்கெனவே உங்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளின் பிரகாரம் வழமையான மருந்துவகைகளையும் மருத்துவ நடைமுறைகளையும் தொடருங்கள்.

 (2) நீங்கள் வழமையாக செல்கின்ற வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்கு  மருந்துவகைகளைப் பெறுவதற்கு பொறுப்புணர்வுடன் செயற்படக்கூடிய நபர்களை உரிய மருத்துவ ஆவணங்களுடன் அனுப்புங்கள்.

(3)  குறித்துரைக்கப்பட்ட தினத்தில் கிளினிக்குகளுக்கு செல்ல இயலாவிட்டால், வார நாட்களில் இன்னொரு தினத்தில் மருந்துவகைகளை வெளிநோயளர் பிரிவில் இருந்து  பெற்றுக்கொள்ளுங்கள்.

(4) மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தில் நில்லுங்கள்.

(5) உங்களுக்கு ஏதாவது சுவாசத்துடன் தொடர்புபட்ட நோய்களுக்கான அறிகுறிகள் ( இருமல், காய்ச்சல், மூச்சுவிவுவதில் சிரமம் ) இருந்தால், அருகில் உள்ள வைத்தியசாலையுடன் அல்லது 117 ( விசேட கொவிட் -- 19 அவசர தொலைபேசி ) இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள். 

உங்களுக்கு கொவிட் -- 19 வைரஸ் தொற்றியிருக்கக்கூடிய சாத்தியம் குறித்து சந்தேகம் வந்தால், ( மேற்கூறப்பட்ட அறிகுறிகள் இருந்தால், அண்மையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருந்தால் அல்லது கொவிட் -- 19 வைரஸின் தொற்றுக்கு ஆளாகியவர் என்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் அல்லது தொற்று ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுபவருடன் தொடர்பு ஏற்பட்டிருந்தால் ) உங்களுக்கு நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கக்கூடிய கொவிட் 19 சிகிச்சை நிலையத்துடன் தயவுசெய்து தொடர்புகொள்ளுங்கள்.நேலடியாக மருத்துவ கிளினிக்கிற்கு செல்லாதீர்கள் ;

(6)  தொற்றா நோய்களுக்கான அவசரகால சிகிச்சைகள் வைத்தியசாலைகளில் வழமைபோன்று வழங்கப்படும்.

(7)  நீங்கள் சுயமாகவே தொற்றுத்தடுப்பு காவலில் இருப்பவராக இருந்தால், உங்களது பகுதி சுகாதார மருத்துவ அதிகாரியுடன் ( எம்.ஓ.எச். / பொது சுகாதார பரிசோதகர் (பி.எச்.ஐ.) தொடர்புகொண்டு தொற்றா நோய்களுக்கான உங்களது வழமையான மருந்துவகைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் ;

 (8)  தற்போது கைவசம் இருக்கக்கூடிய சான்றுகளின் பிரகாரம் புகைபிடிப்பவர்களம் மது அருந்துபவர்களுமே கொவிட் -- 19 வைரஸின் விளைவான சிக்கல்களினால் பாதிக்கப்படக்கூடிய கூடுதல் ஆபத்தைக் கொண்டிருக்கிறார்கள்.தயவுசெய்து புகைபிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.மேலும் உடல் ரீதியான செயற்பாடுகளுடன் துடிப்பாக இருங்கள்.ஆரோக்கியமான உணவுவகைகளை உண்ணுங்கள். உடலில் நீர்த்தன்மையை உச்சபட்சத்துக்கு பேணுங்கள்.