(ஆர்.யசி)

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்களை கூட்டங்கூட விடாமால் தடுத்தமையே தற்போது தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த முடிந்துள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்பட வேண்டியது அவசியம் என்கிறது சுகாதார அமைச்சு.

கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட  86 பேர் இதுவரை  இனங்காணப்பட்டுள்ள நிலையில் நிலைமைகளை கட்டுப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இது குறித்து தெரிவிக்கையில்,

கடந்த சில தினங்களாக இலங்கையில் கொரோனா தொற்று நோயாளர்களின்  எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. எனினும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை மிக வேகமாக குறைவடைந்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்களை கூட்டங்கூட விடாது நிலைமைகளை கட்டுப்படுத்தியதன் விளைவாகவே எம்மால் நோய் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது. இன்றும் சில மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில்  தற்காலிகமாக ஊரடங்கு சட்டத்தை தகர்க்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும் நாட்டின் நிலைமைகள் வழமைக்கு வராததன் காரணத்தினால் இன்னும் சில நாட்களுக்கு ஊரடங்கு சட்டத்தை பிரப்பித்து மக்களை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. எனினும் மக்கள் எக்காரணம் கொண்டும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அளவுக்கு அதிகமாகவே அரசாங்கம் வசம் உள்ளது. மருத்துவ மற்றும் எரிபொருள் பற்றாக்குறையும் இல்லை. அரசாங்கம் அனைத்து விடயத்திலும் மிகக் கவனமாக அவதானித்து மக்களை அசௌகர்யத்திற்கு உள்ளாக்காத வகையில் செயற்பட்டு வருகின்றது.  

ஊரடங்கு சட்டம் தகர்க்கப்பட்டவுடன் மக்கள் அவதிப்பட்டு குழப்பங்களை விளைவித்து நெருக்கடிகளை ஏற்படுத்தாது வழங்கப்படும் கால எல்லைக்குள் தேவையான பொறுட்களை வாங்கிக்கொள்ளுங்கள் என வலியுறுத்துகின்றோம். ஊரடங்கு சட்டம் தகர்க்கப்பட்டாலும் மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கையாண்டு நெருக்கடிகளில் இருந்து விடுபட வேண்டும். எவ்வாறு இருப்பினும் இன்னும் சில நாட்களுக்கு  ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும். அதனை கருத்தில் கொண்டு மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.