(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சுறுத்தலைக் கையாள்வது தொடர்பில் நாளைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனைத்து கட்சிகளினதும் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் பாரிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கும் நிலையிலேயே நாளைய தினம் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களைச் சந்தித்து நிலவரம் குறித்துப் பிரதமர்  ஆராயவிருக்கிறார். 

இச்சந்திப்பு நாளை காலை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. 

இதன்போது கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை, இதனைக் கையாள்வதற்கான வழிமுறைகள், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடாத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பொதுத்தேர்தல் பிற்போடப்பட்டுள்ள நிலையில் தற்போது பராளுமன்றம் இன்றி, அமைச்சரவையுடனேயே அரசாங்கம் இயங்கி வருகிறது. எனினும் தற்போதைய நெருக்கடி நிலையைக் கையாள்வதற்கும், நிலவரம் குறித்து ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் விரைவாகப் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்  என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையிலேயே இச்சந்திப்பு இடம்பெறுகின்றது.

அத்தோடு இதுவிடயத்தில் அரசாங்கள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து, கலந்துரையாடி அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த ஒரு செயற்திட்டத்தைத் தயாரிப்பதற்கு முன்வரவேண்டும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.