கொரோனா என்ற கொடிய நோய்த் தாக்கம் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பிற்போடுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் (ஐ.ஓ.சி.) உலக மெய்வல்லுநர் சங்கம் (வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ்) வேண்டுகோள் விடுத்துள்ளது.

முழு உலகமே கொடிய நோய்த் தாக்கத்தினால் பீதிக்குள்ளாகியுள்ள நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவை திட்டமிட்டவாறு ஜூலை, ஆகஸ்ட் காலப்பகுதியில் நடத்துவது சாத்தியமானதோ விரும்பத்தக்கதோ அல்லவென சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச்சுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் உலக மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவர் செபெஸ்டியன் கோ குறிப்பிட்டுள்ளார்.

'விளையாட்டு விழாவை பிற்போடுமாறு கடிதம் மூலம் தங்களைக் கோருகின்றேன்' என கோ அனுப்பியுள்ள கடிதத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டு விழாவை பிற்போடுமாறு சர்வதேச ஒலிம்பிக் குழுவை வலியுறுத்தியுள்ள முதலாவது சர்வதேச விளையாட்டுத்துறை சங்கம் உலக மெய்வல்லுநர் சங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிகளில் நியாயம், கொவிட்-19 பரவுவதன் காரணமாக முறையான பயிற்சிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை மற்றும் வீர, வீராங்கனைகள் எதிர்கொள்ளும் உயிராபத்துக்கள் அல்லது உபாதைகள் ஆகிய மூன்று பிரதான விடயங்களை காரணம் காட்டியே ஒலிம்பிக்கை பிற்போடுமாறு செபெஸ்டியன் கோ கேட்டுக்கொண்டுள்ளார்.

'டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு புதிய திகதிகளை ஒதுக்குவதற்கு எப்போதும் ஒத்தாசை புரிய உலக மெய்வல்லுநர் சங்கம் தயாராக இருக்கின்றது' என அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

'ஒலிம்பிக் விளையாட்டு விழா பிற்போடப்படுவதை யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் நான் பகிரங்கமாக கூறியதன் பிரகாரம் என்ன விலைகொடுத்தேனும், குறிப்பாக போட்டியாளர்களின் உயிர்களைப் பணயம் வைத்து விழா நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே ஒலிம்பிக் தொடர்பாக வெளிப்படையாகவும் அவசரமாகவும் முடிவு எடுக்கப்படவேண்டும்' என கோ கேட்டுக்கொண்டுள்ளார்.

'விளையாடடு வீர, வீராங்கனைகளுக்கு ஒய்வையும் மனஅமைதியையும் கொடுக்கவேண்டிய கடமையும் கடப்பாடும் எமக்கு உள்ளது என நம்புகின்றேன்' எனவும் அவர் தனது கடித்ததில் குறிப்பிட்டுள்ளார். 

(என்.வீ.ஏ.)