யுத்தங்கள் என்பது காலத்துக்கு காலம் யுகத்துக்குயுகம் மாற்றமடைந்து கொண்டே செல்கின்றது. அதேபோன்று அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும், சேதங்களும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

ஈட்டி, துப்பாக்கி, பீரங்கி, அணுவாயுதம் மற்றும் விஷ வாயு தாக்குதல்கள் என்பவற்றின் காரணமாக மனிதன் ஒருவரை ஒருவர் அழித்த வண்ணமே தனது மானிட வாழ்க்கை கொண்டு செல்கின்றன்.

அது மாத்திரமன்றி உயிரினம் வாழ்வதற்கு தகுதியான பூமி என்ற இந்த கிரகத்தையும் மனிதன் விட்டு வைக்க தவறவில்லை. குறிப்பாக காடுகளை அழிப்பதும், பிளாஸ்டிக் உற்பத்திகளை பெருமளவு உற்பத்தி செய்து அதை சமுத்திரத்தில் கொட்டுவதும்,  ஏனைய நாடுகளுக்கு திருடடுத் தனமாக கொள்கலன் பெட்டிகளில் ஏற்றுமதி செய்வதும் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

அது தவிர மனிதன் தனது போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகைகள் மற்றும் தங்கம், நிலக்கரி, எண்ணெய் வளம் உள்ளிட்ட பொருட்களுக்காக நிலத்தை தோண்டுவதும் போன்ற மனிதனின் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் மனிதன் தனது வாழ்வுக்கு தீங்கினை தேடியது மாத்திரமன்றி கடல்வாழ் உயிரினம் உள்ளிட்ட ஏனைய உயிரினங்களுக்கும் எமனாக அமைந்துள்ளான்.

உதாரணமாக கடந்த ஆண்டு இந்தியப் பெருங்கடலில் உள்ள கோகேஸ் தீவுகளில் சுமார் 508,000 ஹெர்மிட் நண்டுகளும், பசுபிக் பெருங்கடலில் ஹென்டர்சன் தீவில் சுமார் 61,000 ஹெர்மிட் நண்டுகளும் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய டாஸ்மோனியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

அது தவிர கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்த நிலையில் ஸ்கொட்லாந்து நாட்டின் வடகிழக்கு கடற்கரையில் கரையொதுங்கிய திமிங்கிலத்தின் வயிற்றலிருந்து 220 பவுண்ட் பிளாஸ்டிக் குப்பைகளை அந் நாட்டு வனவிலங்கு அதிகாரிகள் மீட்டெடுத்தனர்.

அதேபோன்று அமெரிக்கா புளோரிடா கடற்கரையில் தாய் பறவை ஒன்று இரையென நினைத்து சிகரெட்டை தனது குஞ்சுக்கு ஊட்டிய மனதை உருக்கும்  புகைப்படமொன்றும் கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் உலாவி மானிதனின் செயற்பாடுகளை வெளிக் கொணர்ந்தது.

இது இவ்வாறிருக்க உலகில் காணப்பட்ட அரிய வகை உயிரினமான ஒரேயொரு வெள்ளை பெண் ஒட்டக சிவிங்கியும், அதன் குட்டியும் கென்னியாவில் கடந்த 11 ஆம் திகதி வேட்டைக்காரர்களால் வேட்டையாடப்பட்டது.

இவ்வாறான மானிடனின் மனித நேயமற்ற செயற்பாடுகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

இது போன்ற வேட்டையாடுதல் நடவடிக்கையின் காரணமாகதான் மனிதன் தற்போது ஏனைய உயிரினங்களுக்கு எமனாக மாறியது மாத்திரமல்லது தற்போது மனித இனத்துக்கே எதிரியாகி விட்டான்.

ஆம்! சீனாவின் ஹூபே மாகாணத்தில் வுஹானில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸின் தோற்றப்படானது அவ்வாறான ஒரு வேட்டையாடுதல் நடவடிக்கையின் காரணமாகதான் தோற்றம் பெற்றது என கூறப்படுகிறது.

கொரோனா வைரஸின் தோற்றமானது வுஹானில் காட்டு விலங்குகளை வேட்டையாடி உணவாக உட்கொண்டமையின் காரணத்தினால் தோற்றம் பெற்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனினும் இது எந்தளவு உறுதிப்படுத்தப்பட்டது என்பது கண்டறியப்படவில்லை.

வுஹானில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸானது தற்போது 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, 339,000 க்கும் அதிகமானோரை பாதிப்படையச் செய்துள்ளதுடன் 14,700 க்கும் அதிகமானோரையும் உயிரிழக்க செய்துள்ளது.

அது தவிர பல நாடுகளின் அன்றாட நடவடிக்கை, பொருளாதாரம், உற்பத்தி நடவடிக்கை, போக்குவரத்து, விளையாட்டு என்பவற்றையும் கொரோனா வைரஸ் நிலை குலையச் செய்துள்ளது.

கொரோனாவின் ஆட்டம் தொடர்ந்த வண்ணமே செல்ல விண்வெளிக்கே செய்மதிகளை அனுப்பி ஆராயத் தொடங்கியுள்ள மனிதனுக்கு இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பது என்பது புரியாத புதிராகவே உள்ளது.

கொரோனாவினால் ஏற்பட்ட பாதகம் ஒரு பக்கம் தொடர்ந்த வண்ணமே சென்று கொண்டிருந்தாலும்,  இயற்கைக்கு அதன் அளப்பரிய பங்கு மறைமுகமாக கிடைப்பது வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக இயற்கையை கருத்திற் கொள்ளாது தமது பொருளாதாரத்தை மாத்திரம் கவனத்திற் கொண்டு செயற்படும் நாடுகளின் பல தொழிற்சாலைகளின் நடவடிக்கையை கொரோனா வைரஸ் முடக்கிப் போட்டுள்ளது. அது மாத்திரமன்றி வாகன போக்குவரத்து என்பவை வெகுவாக குறைவடைந்துள்ளமை சுற்றுச் சூழலுக்கு பெரிதும் நன்மையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக காற்று மாசுபாடானது பெரிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனிடையே தூக்கம் கொள்ளக்கூட நேரம் இல்லாது இயந்திரமாக ஓடிக் கொண்டிந்த மனிதனை அவனது பணிகளை மறக்க செய்து முடிக்கிப் போட்டுள்ளது கொரோனா, மேற்கத்தைய நாட்டினருக்கும் கைகூப்பி வணக்கம் சொல்லும் காலாசாரத்தை கற்றுக் கொடுத்தது கொரோனா, பெருங்காயம் உள்ளிட்ட மூலிகை பொருட்களை மீண்டும் நினைவு படுத்தியது கொரோனா, ஏன் போதி தர்மனின் வாழ்க்கை பக்கங்களைக் கூட எடுத்துப் பார்க்கச் செய்துள்ளது இந்த கொரோனா.

கொரோனாவினால் மனிதர்கள் மாத்திரம் கொத்துக் கொத்தாக உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்தி வர, அவனை தவிர ஏனைய உயிரினங்கள் எதுவும் அதனால் சிறிதளவு கூட பாதிக்கப்படவில்லை.

இவ்வாறான சில சில சம்பவங்களை சற்று கூர்ந்து கவனிக்கும்போது தான், தனது தான்தோன்றித் தனத்தினால் இயற்கையை அழித்து வந்த மனிதனுக்கு அந்த இயற்கையே கொரோனா வடிவில் எதிரியாக வந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

விஞ்ஞானத்தின் மூலமாக பல புரியாத விடயங்களை கண்டறிந்த மனிதனுக்கு காட்டு விலங்குகளை உட்கொண்டமையினால் அதன் மூலம் தோற்றம் பெற்றதாக கூறப்படும் கொரோனாவுக்கான மருந்தினை கண்டுபிடிப்பதற்கு இன்னும் திணறி வருகின்றான்.

இயற்கை என்பது மனிதர்களுக்கு மாத்திரமல்ல. அதன் மீது அதிகாரம் கொள்ள எம்மைத் தாண்டியும் பல இலட்சக் கணக்கான உயிரினங்கள் உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே இனியாவது மனிதன் இயற்கைக்கு எதிரான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை கைவிட்டாலோ அல்லது குறைத்துக் கொண்டாலோ மீண்டும் ஒரு கொரோனா பரவல் போன்ற நோய்த் தொற்று ஏற்படாதவாறு பாதுகாத்துக்கொள்ள முடியும்.

எவ்வாறிருப்பினும் மனிதர்களுக்கு எதிரியாகியுள்ள கொரோனாவுக்கான தொற்று மருந்தை விரைவில் ஆய்வாளர்கள் கண்டறிந்து மேலும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என பிரார்த்திப்போம்.

ஜெ. அனோஜன்

Photos Credit : twitter