அமெரிக்காவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள   12 வயது சிறுமி உயிருக்காக போராடி வருகின்றார் என  தெரிவித்துள்ள குடும்பத்தினர் இது இளவயதினருக்காக ஒரு எச்சரிக்கை என தெரிவித்துள்ளனர்.

எம்மா என்ற 12 வயது சிறுமி அட்லாண்டா ஸ்கொட்டிஸ் ரைட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சுவாசிக்கின்றார் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமிக்கு வேறு நோய்ப்பாதிப்புகள் இல்லை என தெரிவித்துள்ள குடும்பத்தினர் சிறுமி சமீபத்தில் எங்கும் செல்லவில்லை என  தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் செயற்கை சுவாசம் அவசியமாகவுள்ளது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் உறவினர் ஒருவர் இது கொரோன வைரஸ் குறித்து அக்கறையின்றியிருக்கும் இளவயதினரிற்கு ஒரு எச்சரிக்கை என தெரிவித்துள்ளார்.

இங்கு 12 வயது சிறுமி  உயிருக்காக போராடுகின்றாள்,மக்கள் சுயதனிமைப்படுத்தலை கடைப்பிடிக்கவேண்டும்,தங்கள் பிள்ளைகள் குறித்து அவதானமாகயிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் குடும்பத்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் இவரே குறைந்த வயதை உடையவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் மற்றும் இளவயதினருக்கு பாதிப்பு குறைவு என  பரவலான கருத்து உள்ளபோதிலும் அமெரிக்காவில் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 20 வீதமானவர்கள் இளவயதினர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.