(நெவில் அன்தனி)

தேசிய சுகாதாரத்தில் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ள கொவிட்-19 என்ற கொடிய நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு உதவும் பொருட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் 25 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்க தீர்மானித்துள்ளது.

இதற்கு அமைய இந்த நிதி உதவி உடனடியாக அரசாங்கத்திடம் வழங்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலைக்கு மத்தியில் கொனோரா தொற்று பரவுவதைத் தடுக்க அரசு எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

மறு அறிவித்தல்வரை சகலவிதமான உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளையும் ஏற்கனவே பிற்போட்டுள்ள ஸ்ரீலங்கா கிரிக்கெட், அரசாங்கத்தின் ஆலோசனைகளுக்கு கீழ்ப்படிந்து தத்தமது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு வீரர்கள் (முதல்தர மற்றும் தேசிய), அதிகாரிகள் ஆகியோரை ஸ்ரீலங்கா கிரிக்கெட் கேட்டுக்கொண்டுள்ளது.

இரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு சமூக வலையமைப்புகள் ஊடாக கோரிவருவதன் மூலம் தேசிய வீரர்கள் கொவிட்-19ஐக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.

தற்போது நிலவும் சுகாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கு அரசாங்கமும், சுகாதார மற்றும் அரச அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார் ஆகியோரும் எடுத்துவரும் கடும் முயற்சிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் பெரிதும் பாராட்டியுள்ளது.

தனது பங்குதாரர்களான உறுப்பு கழகங்கள், மாவட்ட மற்றும் மாகாண சங்கங்கள் ஆகியன தற்போதைய சூழ்நிலையில் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கையுடன் செயற்படவெண்டும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வேண்டுகோள் விடுத்துள்ளது.