சீனாவின் ஹூபேயில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாகவும் புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சீனாவில் ஒன்பது பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளதுடன், 39 புதிய கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சீனா சென்றவர்கள் ஆவர். அதன்படி மொத்தமாக 353 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்த கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்னர்.

கொரோன பரவலின் மையமான ஹூபேயில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 3,153 ஆக காணப்படும் அதவேளை சீனாவின் பிரதான நிலப்பரப்புகளில் உயிரிழந்தோரின் தொகையும் 3,270 ஆகும் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அது தவிர அங்கு 81,093 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 72,703 பேர் பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் சீன அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவளை உலகளாவிய ரீதியில் இதுவரை கொரோனா தொற்றினால் 339,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 14,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹப்கின்ஸ் பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : CNN