(ஆர்.ராம்)
ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகியுள்ள அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் அரசியல் பிரசாரங்களை மேற்கொள்வதை தவிர்த்து கொரோனா தொற்றுக்கு எதிராக போராடுங்கள் என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.


ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு பின்னரான நாட்டின் நிலைமையை மையமாகக்கொண்டே தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடுவது பற்றி கரிசனை செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மே 14 ஆம் திகதிக்கு பின்னரே பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் வழங்கப்படும் எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையிலேயே மேற்கண்டவாறான கோரிக்கையை தவிசாளர் விடுத்துள்ளார்.


கொரோனா வைரஸ் விடயத்தினை மையப்படுத்தி சில அரசியல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் பொருட்களை, சேவைகளை வழங்கும் போர்வையில் அரசியல் பிரசாரங்களை மேற்கொள்வதாக எமக்கு சில தகவல்கள் கிடைத்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.


அவ்வாறான நடவடிக்கைகளை கைவிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் கொரோனா வைரஸை நாட்டை விட்டு அகற்றுவதற்காக போராடவேண்டும். தேர்தலை விடவும் மனித உயிர் பாதுகாப்பு மேலானது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.