(ஆர்.ராம்)

வடமாகாணம் உள்ளிட்ட கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களிற்கும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் 2 மணிக்கு அமுலாக்கப்படும் ஊரடங்கு உத்தரவு எவ்வளவு காலம் தொடரும் என்று வரையறுத்துக் கூறப்படாமையானது ஆபத்தானது என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மூன்று மாவட்டங்களிற்கும் எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை ஆறு மணிவரையில் ஊரடங்கு அமுலில் இருப்பதுதோடு பின்னர் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு அமுலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்கும் இன்று தளர்த்தப்படுவதாக இருந்த ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு அறிவிப்புகளை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இந்த எட்டு மாவட்டங்களுக்கும் அமுலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவானது மீண்டும் தளர்த்தப்பட்டு அமுலாக்கப்படுகின்றபோது அதற்கான கால வரையறை அந்த அறிவிப்புக்களில் கூறப்பட்டிருக்காத நிலையிலேயே மந்திரனும் தனது டுவிட்டர் பதிவின் ஊடாக அவ்விடயத்தினை ஜனாதிபதியிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆத்துடன் ஊரடங்கு உத்தரவு காலை ஆறுமணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இரண்டு மணிக்கு அமுலாக்கப்படுவதை கவனத்தில் கொண்ட சுமந்திரன் தளர்த்தப்படும் காலப்பகுதியை அதிகரிக்குமாறும் அவ்வதிகரிப்பானது பொதுமக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.