2020 ஒலிம்பிக் போட்டிகள் பிற்போடப்படலாம் என ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகளை அதன் முழுமையான வடிவத்தில் நடத்த முடியாவிட்டால் பிற்போடுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக்போட்டிகளை ஒத்திவைப்பதை தவிர ஜப்பானிற்கு வேறு வழியில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒலிம்பிக்போட்டிகள் இரத்துச்செய்யப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் எதுவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஜப்பான் வைரசினை வெற்றிகரமாக எதிர்கொண்டு ஓலிம்பிக்போட்டிகளை நடத்தும் என தெரிவித்திருந்த நிலையிலேயே பிரதமர் புதிய நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்.

இதேவேளை ஒலிம்பிக்போட்டிகளிற்கு தனது நாட்டின் அணியை அனுப்பபோவதில்லை என கனடா அறிவித்துள்ளது.

கனடாவின் ஒலிம்பிக் குழு ஓலிம்பிக்போட்டிகளை ஒரு வருடத்திற்கு  ஒத்திவைக்குமாறு சர்வதேச ஒலிம்பிக்குழுவினை கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் ஆபத்து காரணமாகவே தனது அணியை அனுப்பபோவதில்லை என குறிப்பிட்டுள்ள கனடா உலகம் தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி விளையாட்டினை விட மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளது.