(நா.தனுஜா)

எமது நடத்தையின் ஊடாக மாத்திரமே கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகையில் பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் ஊடாக இந்தச் சவாலை வெற்றிகொள்ள முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் முழுவதும் பரவி, தற்போது இலங்கையிலும் பரவ ஆரம்பித்திருக்கும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அதன்படி தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான அரசின் செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதுடன் சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார சேவையாளகளின் ஆலோசனைகளைப் பின்பற்றி நடக்கவேண்டும்.  

அதேபோன்று முப்படையினர், பொலிஸார் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இன்னமும் இந்த தொற்றுநோயின் பாரதூரத்தன்மையைப் புரிந்துகொள்ளாமல் சில தரப்பினர் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

எமது நடத்தையின் ஊடாக மாத்திரமே வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும். நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட வகையில் பொறுப்புணர்வுடன் செயற்படுவதன் ஊடாக இந்தச் சவாலை வெற்றிகொள்ள முடியும்.