உலகெங்கிலும் தற்போது மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையானது 156,396 ஆக காணப்பட்டது.

அதவேளை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு வாரத்திற்கு முன்னர் 5,833 ஆக பதிவாகியிருந்தது. 

இந் நிலையில் நேற்றைய தினம் அந்த எண்ணிக்கை 13 ஆயிரத்தையும் கடந்துள்ளதாகவும் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது.

சீனா:

சீனாவில் சனிக்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளான ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 46 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 46 கொரோனா தொற்றாளர்களும் ஹூபேக்கு வெளியே கண்டறியப்பட்டவர்கள் ஆவர்.

இவ்வாறு சனிக்கிழமை மாத்திரம் அடையாளம் காணப்பட்ட 46 பேரில் 45 பேர் வெளிநாடுகளிலிருந்து சீனா சென்றவர்கள் ஆவர். மொத்தமாக இதுவரை வெளிநாடுகளிலிருந்து சீனா சென்ற 314 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டவர்கள் ஆவர்.

ஹூபேயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது சனிக்கிழமை வரை 3,144 ஆகவும், சினாவின் பிரதான நிலப்பரப்புகளில் இடம்பெற்ற உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,261 ஆகவும் உள்ளது.

சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 81,054 ஆக உள்ளதாகவும்.

இது தவிர அங்கு 72,244 கொரோனா தொற்றாளர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றியுள்ளதாகவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நியூயோர்க்: 

நியூயோர்க்கில் தற்போது 12,260 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 70 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் சுமார் 1,450 பேர் வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் குறைந்தது 370 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

கொரோனாவினால் பெரிதும் பாதிக்கப்பட்ட அமெரிக்க மாநிலமாக தற்போது நியூயோர்க் உள்ளது.

அமெரிக்காவில் மொத்தமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.

இத்தாலி:

இத்தாலியில் 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 793 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மொத்தமாக அங்கு உயிரிழந்தோரின் தொகை 4,825 ஆக பதிவாகியுள்ளதாக அந் நாட்டு சிவில் பாதுகாப்பு நிறுவனம் சனிக்கிழமை சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தாலியில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி லோம்பார்டி ஆகும். அங்கு இதுவரை மொத்தமாக 3,095 பேர் உயிரிழந்துள்ளனர்.

இத்தாலியில் மொத்தமாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 53,578 ஆக காணப்படுகிறது.

Photo Credit : CNN