-கபில்

கொரோனா பீதிக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அதிக ஆரவாரமின்றி முடிவுக்கு வந்திருக்கிறது. வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், தேர்தலைப் பிற்போடும் முடிவை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

நாடெங்கும் மக்கள் கொரோனா பீதியில் வீடுகளுக்குள் முடங்கியிருந்த நிலையிலும், பொருட்களை வாங்கிக் குவிக்கின்ற நிலையிலும் ஈடுபட்டிருந்த போது, அரசியல்வாதிகள் மாத்திரம், வேட்புமனுக்களுக்காக மோதிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நாடாளுமன்றத் தேர்தல் கொரோனா பீதியால், ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் சோதனையாக இருந்தாலும், தமிழ் மக்களுக்கு அந்தச் சோதனை இன்னும் கடுமையானதாகவே இருக்கப் போகிறது.

ஏனென்றால், தமிழ்க் கட்சிகளும், பிரமுகர்களும் பிரிந்து மோதிக் கொள்ளுகின்ற ஒரு தேர்தலாக இது காணப்படுகிறது. விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்து தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலமான அரசியல் கட்டமைப்பாக இருந்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதிக்கத்தை உடைப்பது இந்த தேர்தலின் போட்டியிடும் கட்சிகள், குழுக்களின் முக்கியமான இலக்காக தெரிகிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, நாடாளுமன்றத்தில், 15 இற்கும் குறையாத ஆசனங்களைத் தக்க வைத்து வந்திருக்கும் கூட்டமைப்பை, உடைத்துப் பலவீனமாக்கி விட வேண்டும் என்பதில், தெற்கின் பேரினவாதக் கட்சிகளும், வட-கிழக்கின் தமிழ்க் கட்சிகளும் கங்கணம் கட்டியிருக்கின்றன.

தமிழ் மக்கள், ஒன்றுபட்டு நிற்க வேண்டும், பலம் வாய்ந்த ஒரு அணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். என்று கூறிக் கொண்டே, தமிழரின் பலத்தை சிதைக்கும் வேலையைத் தான், தமிழர் தரப்பில் அரசியல் செய்யக் கிளம்பியிருப்பவர்கள் அனைவருமே செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறிழைத்து விட்டது, அதற்கு மாற்றான ஒரு பலமான அணியை உருவாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள், இந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தை அதற்காகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டனர்.

கூட்டமைப்பின் மீது அதிருப்தி கொண்டவர்களும், கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டவர்களும் வடக்கு, கிழக்கில் ஒன்றுபட்டு நின்று ஒரு மாற்று அணியை- மாற்றுத் தலைமையை உருவாக்க முனைந்திருக்க வேண்டும்.

கிழக்கில் தனியாகவும், வடக்கில் தனியாகவும் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி எங்குமே கைகூடவில்லை. வடக்கில் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தனியாகவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாகவும் போட்டியிடுகின்றன. இதுபோதாதென்று, ஐங்கரநேசனின் தமிழ் தேசிய பசுமை இயக்கம் சுயேட்சையாக போட்டியில் நிற்கிறது.

இன்னும் பல சுயேட்சைக் குழுக்களும், கட்சிகளும் வரிசை கட்டிக் கொண்டு தமிழ் மக்களின் வாக்குகளுக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை உடைக்கும் அணிகள் மாத்திரமே, களத்தில் இறங்கியிருக்கின்ற அல்லது இறக்கி விடப்பட்டிருக்கின்றனவே தவிர, கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைத்து, ஒரு பலமான அணியைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று யாருமே சிந்திக்கவில்லை. அவ்வாறான ஒரு பலமான அணி தான் தமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுகிறது என்பதை அவர்கள் உணரவில்லை. இதைக் கூட உணர முடியாதவர்களால் எவ்வாறு தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தகுதி பெறுவார்கள்?

வடக்கில் தான் இந்த நிலை என்றால், கிழக்கிலும் அதே கதி தான். கூட்டமைப்பின் ஆதிக்கத்தை உடைக்கும் இலக்குடன், கிழக்கில் தமிழர் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற வெளிப்படையான கோசத்தை முன்வைத்து, ஒரு அணியை உருவாக்கும் முயற்சிகள் கிழக்கு தமிழர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

அந்தக் கூட்டணியில் தமிழர் விடுதலைக் கூட்டணி உள்ளிட்ட பல கட்சிகள், தரப்புகள் இணைந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் கடைசியில் நடந்திருப்பது என்ன? கிழக்குத் தமிழர் ஒன்றியத்தில் முக்கிய பாத்திரம் வகித்த அகில இலங்கை தமிழர் மகா சபை, அம்பாறை மாவட்டத்தில், கருணாவை சுயேட்சைக் குழுவில் (விநாயகமூர்த்தி முரளிதரன்) போட்டியில் நிறுத்தியிருக்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களின் செறிவு குறைவு. அங்கு தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்பட்டால், தமிழரின் பிரதிநிதித்துவம் தான் பாதிக்கப்படும். இதனை தெளிவாக உணர்ந்திருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தோற்கடித்தால் போதும் என்ற இலக்குடன் தான், தமிழர் மகாசபை, செயற்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்கு முழுவதிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்த சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதில் இருந்து விலகியிருக்கிறது.

அங்கு போட்டியிடுவதற்கு போதிய வாய்ப்புகள், கட்டமைப்புகள் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது தமிழர் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. எவ்வாறாயினும், தமிழர் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றுவதற்காக அந்த முடிவை எடுத்திருப்பதாக விக்னேஸ்வரன் கூறியிருப்பது வரவேற்கக் கூடியது.

கிழக்கின் ஒற்றுமை, தமிழர் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்திய தரப்புகள், அம்பாறையில் தமிழரின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவில்லை. மட்டக்களப்பில் கடந்தமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து

தெரிவாகி, 2018 ஆட்சிக் கவிழ்ப்பின் போது, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்த வியாழேந்திரன், இந்த முறை பொதுஜன பெரமுனவில் களமிறங்கியிருக்கிறார். பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் தான் இணையவில்லை என்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அழைத்தார், அவருடன் இணைந்தேன் என்று ஆட்சிக் கவிழ்ப்பின் போது, நியாயப்படுத்தியவர் அவர். கிழக்கு தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படுவதாக காண்பித்துக் கொண்டவர். அதற்கான கூட்டு ஒன்றில் போட்டியிடப் போவதாகவும் காட்டிக் கொண்டார். கடைசியில், மட்டக்களப்பில் பேரினவாதக் கட்சியில் போட்டியிடும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

கூட்டமைப்பை தோற்கடிப்பது என்ற இலக்குடன் செயற்படும் தமிழ் கட்சிகளும், அரசியல்வாதிகளும், யாருடைய நலன்களுக்காக பணியாற்றுகிறார்கள் என்பதை விளங்கிக் கொள்வது கடினமானதல்ல. கிழக்கில், சிறிய தமிழ்க் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் ஆசனங்களைப் பெறுவது கடினமானது. அதனை உணர்ந்து கொண்டாலும், தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனப் பிழையாகி விட வேண்டும் என்ற வகையிலேயே சிந்திக்கின்றன.

இவ்வாறான நிலை தான், கிழக்கில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் குறைவதற்கு அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாவதற்குக் காரணம். வடக்கில், யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் 7 ஆசனங்களுக்காக இந்த முறை கடுமையான போட்டி.

தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி செயற்படும் அரசியல் கட்சிகளே தமக்குள் மோதிக் கொண்டிருக்கின்ற நிலையில், பேரினவாதக் கட்சிகள் இந்தத் தருணத்தைப் பார்த்து காத்திருக்கின்றன. கடந்த முறை மயிரிழையில் பெற்றுக் கொண்ட ஒரு ஆசனத்தை தக்கவைப்பதற்காக ஐதேகவும், கடந்தமுறை சொற்ப வாக்குகளால் இழந்து போன ஆசனத்தை இந்த முறையாவது பெற்று விட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், விஜயகலாவையும், அங்கஜனையும் மாத்திரம் நம்பி களம் இறங்கியிருக்கின்றன.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மாவை சேனாதிராசா, சுமந்திரன், சிறீதரன், சித்தார்த்தன் போன்ற முக்கிய வேட்பாளர்கள் கூட்டமைப்பிலும், சி.சி.விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா, அனந்தி சசிதரன் போன்றவர்கள், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியிலும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் போன்றவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலும், போட்டிக் களத்தில் குதித்திருக்கிறார்கள்.

ஆக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பலமான வேட்பாளர்கள் பலர் பல்வேறு கட்சிகளில் குதித்திருக்கின்ற நிலையில் மக்களின் தெரிவு, வேட்பாளர்களைக் கவனத்தில் கொண்டதாக இருக்கப் போகிறதா, அல்லது கட்சியை இலக்காக கொண்டதாக இருக்கப் போகிறதா என்ற கேள்வி இருக்கிறது.

வன்னி மாவட்டத்தில் உள்ள 6 ஆசனங்களைக் கைப்பற்றுவதற்காகத் தான் அதிக போட்டி. இங்கு கூட்டமைப்பை தோற்கடிக்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றுடன், பேரினவாதக் கட்சிகளும், அவற்றின் நலன்களுக்காக செயற்படும் கட்சிகள், சுயேட்சை குழுக்களும் இங்கு அதிகளவில் களமிறங்கியிருக்கின்றன.

இலங்கையிலேயே அதிகளவு கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் களமிறங்கியிருப்பது வன்னியில் தான். தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்திக் கொண்டிருந்த தரப்புகளே இங்கு தமிழ் மக்களின் வாக்குகளை சிதைக்கும் கைங்கரியத்தை முன்னெடுத்தன.

குறிப்பாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன், வன்னியில் விடுதலைப் புலிகள் மக்கள் பேரவையின் மூலம், சுயேட்சைக் குழுவாக களமிறங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால் அவரது குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு விட்டது.

முன்னாள் போராளிகளுக்கு இடமளிக்குமாறு கூட்டமைப்பிடம் அவர் அவசரமாக கோரினார். கடைசி நேரத்தில் அவரது கோரிக்கை பரிசீலிக்கப்படாது என்பது தெரிந்ததே. அடுத்தடுத்த நாட்களிலேயே அவர், முன்னாள் போராளிகளுக்கு கூட்டமைப்பு இடமளிக்காததால் தனியாக போட்டியிடுவதாக அறிவித்தார்.

முன்னாள் போராளிகளை பயணமாக வைத்து, தமிழ் மக்களின் வாக்குகளை சிதைக்கவே அவரும் முற்பட்டிருந்தார். வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பலமான ஒரு  கட்டமைப்பை தமிழர் அரசியலில் இருந்து இல்லாமல் செய்வதற்காக சிங்கள பேரினவாதக் கட்சிகளுடன் தமிழ்க் கட்சிகள், குழுக்கள் போட்டி போட்டுக் கொண்டு பணியாற்றுகின்றன. அதற்கான தேர்தலாகத் தான் இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

வடக்கு, கிழக்கில் அதிகளவில் களமிறங்கியுள்ள, களமிறக்கி விடப்பட்டுள கட்சிகளும், சுயேட்சைகளுமே இதற்குச் சாட்சி. தமிழ் மக்கள், ஒற்றுமையாக- வலிமையான தரப்பாக இருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றனர். அந்த உணர்வுகளைக் கூட புரிந்து கொள்ள முடியாதவர்கள், எப்படி தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக முடியும்?