-ஹரிகரன்

சீனா மற்றும் இத்தாலி, சுவிஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளைப் போல, இலங்கையும் கொரோனாவுக்கு எதிரான முழு அளவிலான போருக்கு முகம் கொடுத்திருக்கிறது.

கொரோனாவை எட்ட நின்று பார்த்துக் கொண்டிருந்த இலங்கைத் தீவு, இரண்டு வாரங்களுக்குள், முழு அளவிலான பீதி நிலைக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவுகின்ற வேகம் மாத்திரமன்றி, அதனை ஒட்டி முன்னெடுக்கப்படுகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கூட, இந்த நிலைமைக்குக் காரணம்.

இந்தநிலையில், இலங்கைத் தீவின் பொருளாதாரம் எந்தளவுக்கு மோசமடையும் என்று கணிக்க முடியாத ஒரு சூழல் தோன்றியிருக்கிறது.

கடந்த செவ்வாய்க்கிழமைக்கும் வியாழக்கிழமைக்கும் இடைப்பட்ட மூன்று நாட்களில், அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு 3 ரூபாவினால் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

இவ்வாறானதொரு நிலையில், அடுத்து வரும் நாட்களில் இலங்கை ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க முடியாத நிலையே காணப்படுகிறது.

வெளிநாட்டு நாணய கையிருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக மோட்டார் வாகனங்கள், அவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை அரசாங்கம் 3 மாதங்களுக்கு இடைநிறுத்தியிருக்கிறது.

பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்திருக்கின்றன. ஏற்றுமதிகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றன. சுற்றுலாத்துறை வருமானம் தொடர்ச்சியான அடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் இலங்கையின் வெளிநாட்டு வருமான மூலங்கள் பேரிடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிராத நிலையிலேயே கடந்த நொவம்பர் மாதம் ஆட்சியைப் பிடித்த தற்போதைய அரசாங்கத்தினால், இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தையும் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை.

மார்ச் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்து, ஏப்ரலில் தேர்தலை நடத்தி விட்டால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற கனவுடன் காய்களை நகர்த்திய அரசாங்கத்துக்கு கொரோனாவின் வடிவில் வந்திருக்கிறது பெரும் சிக்கல்.

இப்போது, நாடாளுமன்றமும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலும் இல்லை. தேர்தலை பிற்போட்டுள்ள தேர்தல்கள் திணைக்களம், இனி எப்போது அது நடத்தப்படும் என்பதைக் கூட கூறவில்லை. பொதுத்தேர்தல் மே மாதமா, ஜூன் மாதமா, ஜூலை மாதத்திலா நடத்தப்படும் என்பதை, கொரோனா தான் தீர்மானிக்கும் என்று, தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியிருக்கிறார்.

ஆக, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் கூட, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்த்து விட முடியாது. ஏனென்றால் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு 21/4 தாக்குதல்களுக்குப் பின்னர், இலங்கையின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. கடந்த 10 மாதங்களாக அந்தச் சரிவில் இருந்து மீள்வதற்காக இலங்கை போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் தான், அடுத்த பேரிடியாக கொரோனா அபாயம் வந்திருக்கிறது.

இந்த கொரோனா அபாயத்தினால் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி யாராலும் முற்கணிப்புக்கு உட்படுத்தப்படாதது என்பதுடன், இதன் தாக்கத்தை முழுமையாக கணிப்பதும் கடினமானது.

கொரோனா பீதியை அடுத்து, நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும், அளிக்கப்பட்டுள்ள விடுமுறைகளும் உள்நாட்டு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. திடீரென தோற்றுவிக்கப்பட்ட பொருட்களுக்கான தட்டுப்பாடும், பதுக்கலும், கள்ளச் சந்தையும், பொருளாதார மந்த நிலையை நோக்கி நாட்டை தள்ளிச் சென்றிருக்கிறது.

வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை கிட்டத்தட்ட அடியோடு சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் எல்லாத் துறைகளிலும் உற்பத்தியும், ஏற்றுமதிகளும் முழுமையான பாதிப்பைச் சந்தித்து நிற்கின்றன.

உள்நாட்டு உற்பத்திகள் முடங்கி, ஏற்றமதி வருமானமும். சரிந்து, சுற்றுலாப் பயணிகள் வருகையும் அடியோடு நின்று போய் விட்ட நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்கக் கூடிய மூலங்கள் எதுவும் இப்போதைக்குக் கிடையாது என்பதே உண்மை. இதுபோன்ற நிலை, கடந்த 21/4 தாக்குதல்களுக்குப் பின்னரும் இருந்தது, போர்க்காலத்திலும் காணப்பட்டது. அப்போதெல்லாம், வெளிநாட்டு நிதி உதவிகளும், கடன்களும் இலங்கைக்கு கைகொடுத்திருந்தன.

இப்போதைய நிலையில் வெளிநாட்டு நிதியுதவிகளையோ, கடன்களையோ கூட அரசாங்கத்தினால் பெறமுடியாத நிலை தோன்றியிருக்கிறது. கொரோனா உலகளாவிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வளர்ந்த நாடுகளைப் புரட்டியெடுக்கிறது.

இத்தாலி போன்ற நாடுகள், கொரோனா தாக்கிய முதியவர்களை கைவிடும் முடிவுக்கு வந்திருக்கின்றன. அந்தளவுக்கு கொரோனா பேரவலமாக மாறியிருக்கிறது. கொரோனா பரவ ஆரம்பித்த சீனா தற்போது அதனைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி கண்டிருந்தாலும், அதன் பொருளாதாரம் பெரிதும் ஆட்டம் கண்டுபோயிருக்கிறது.

எனவே, இலங்கைக்கு பொருளாதார ரீதியாக கைகொடுக்கக் கூடிய நாடுகளும் கூட பெரியளவில் உதவ முடியாத நிலையில் இருக்கின்றன. சீன அபிவிருத்தி வங்கியிடம் அரசாங்கம் 500 மில்லியன் டொலர் கடனை கடந்தவாரம் அரசாங்கம் பெற்றிருக்கிறது.

சீனாவிடம் இருந்து 2 பில்லியன் டொலர் கடனை அரசாங்கம் பெறுவதற்கு முற்பட்டிருந்த போதும், அதில் நான்கில் ஒரு பங்கு தான் இப்போது கிடைத்திருக்கிறது. ஏனைய வெளிநாட்டு நிதி மூலங்களிலும் இதேநிலை தான் காணப்படுகிறது.

எனவே, வெளிநாட்டு நிதி, கடன்களைக் கொண்டு பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கின்ற வாய்ப்பு இப்போதைக்கு இல்லை என்றே கூறலாம். ஏற்றுமதி வாய்ப்புகளும் குறைந்து, சர்வதேச விமான மற்றும் கப்பல் போக்குவரத்துகளும், மட்டுப்படுத்தப்படும் நிலை ஒன்று காணப்படுவதால், இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதார மூலங்களும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தநிலை எதுவரை தொடரப் போகிறது என்ற கேள்விக்கு யாராலுமே பதில் கூற முடியாதிருக்கிறது.

ஏனென்றால் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை முழு அளவில் வெற்றியைப் பெறுவது மாத்திரம் முக்கியம் அல்ல. இலங்கை எப்போது கொரோனாவைக் கட்டுப்படுத்தும் என்பதைக் கூட கணிக்க முடியாது.

அவ்வாறு கட்டுப்படுத்தினாலும் கூட, முழு உலகமும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வெற்றி கொள்ள வேண்டியது முக்கியம். ஏனென்றால், இலங்கை தன்னிறைவுப் பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாடு அல்ல. இறக்குமதி, ஏற்றுமதி, சுற்றுலா வருமானம் போன்ற, ஏனைய நாடுகளில் தங்கியிருக்கின்ற பொருளாதார கட்டமைப்பை கொண்டிருக்கிறது இலங்கை. எனவே, உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனாவின் பிடியில் இருந்து உலகம் முழுதும் விடுபடும் வரைக்கும், இலங்கையினால் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாது. அதுவரை இந்தச் சிக்கலுக்கு தீர்வு கிட்டப் போவதும் இல்லை.