-என்.கண்ணன்

உலகமெங்கும் கொரோனா பீதியில் உறைந்திருக்கின்ற நிலையில், இலங்கைத் தீவு ஒரு பக்கத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், இன்னொரு பக்கம் பொதுத்தேர்தலுக்கான தயார்படுத்தல்களுக்கும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

போர்க்காலத்தில் இலங்கைத்தீவு பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான பேரணிகளை நடத்துவதற்கும், பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்கும் கூட பயத்தில் உறைந்திருந்த ஒரு காலம் இருந்தது.

துப்பாக்கிகளுக்குப் பயந்து வேட்பாளர்கள் ஓடி ஒளித்துக் கொண்டிருந்த சூழலும் நிலவியது. வேட்புமனுக்களில் கையெழுத்திடுவதற்காக வேட்பாளர்களைத் தேடிப்பிடிக்கவும், தேர்தல் பணிகளுக்கான அதிகாரிகளை வீடு வீடாகச் சென்று இராணுவ வாகனங்கள் ஏற்றிக் கொண்டிருந்த தேர்தல் காலமும் இலங்கையில் இருந்தது.

அப்போதெல்லாம் கூட, தேர்தலை ஒத்திவைக்கின்ற பேச்சு இருக்கவில்லை. அத்தகைய கோரிக்கைகளும் விடுக்கப்படவில்லை. ஏனென்றால் போர் எப்போது முடிவுக்கு வரும், யுத்த சூழல் எப்போது தீரும் என்று தெரியாத நிலை இருந்தது. போர் முடியும் என்ற நம்பிக்கையும் மக்கள் மத்தியில் இருக்கவில்லை.

இப்போது, தேர்தலை நடத்த வேண்டாம், ஒத்திவையுங்கள் என்று கோருகின்ற நிலை முதல்முறையாக ஏற்பட்டிருக்கிறது. கொரோனா அபாயத்தை, அரசியல்வாதிகள் சந்தர்ப்பத்துக்கேற்ப அரசியல் செய்யும் உத்தியாக கையாள ஆரம்பித்துள்ளனர். ஆரம்பத்தில் இலங்கையில் கொரோனா ஆபத்து இருக்கவில்லை. கொரோனா பரவக்கூடிய சாத்தியங்கள் குறைவு என்றே நம்பப்பட்டது. அவ்வாறான நிலையில், அரசாங்கம் தேர்தலைப் பிற்போடக் கூடும் என்றொரு கருத்து உலாவியது.

அந்த பீதியைக் கிளப்பி விட்டது எதிர்க்கட்சி தான். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும், முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னான்டோவும், கொரோனா பீதியைப் பயன்படுத்தி, தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிடுகிறது என்று அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

அப்போதைய சூழ்நிலையில், கொரோனா பீதி இலங்கை மக்களிடம் அதிகம் தொற்றிக் கொள்ளாத நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவியது.

அது, அரசாங்கத்துக்கு தேர்தலில் எதிர்மறையான தாக்கத்தை செலுத்த வாய்ப்பிருப்பதால், தேர்தலை பிற்போடும் முடிவு எடுக்கப்படலாம் என்றும் கருதப்பட்டது. இன்னொரு பக்கத்தில், தேர்தலுக்கு முன்னர் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் போனால், அது அரசாங்கத்துக்கு எதிரான ஆயுதமாக திரும்பும் ஆபத்தும் இருந்தது. இதனால் தான், இந்தச் சூழலில் அதிகம் றிஸ்க் எடுத்துக் கொள்ள விரும்பாமல், தேர்தலை பிற்போடும் முடிவை அரசாங்கம் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கருதப்பட்டது.

அப்போது தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது என்றும், அவ்வாறான நடவடிக்கைகளை அரசியல் சதி என்றும் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள் பின்னர் தலைகீழான முடிவுக்கு வந்தன. அரசாங்கத்தின் பங்காளிகளாக அல்லாத, அதனுடன் கூட்டு வைத்திருக்காத எல்லாக் கட்சிகளுமே தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரும் முடிவுக்கு வந்தன.

கடந்தவாரத்துக்கு முந்திய வாரம் தேர்தலை ஒத்திவைக்க சதி செய்வதாக குற்றம்சாட்டிய சஜித் பிரேமதாச கூட, தேர்தலை ஒத்திவைக்காமல் ஜனாதிபதி நீரோ மன்னனைப் போல இருக்கிறார் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

ஒரு சில நாட்களுக்குள் அரசியல்வாதிகளின் நாக்குகள் எவ்வாறு தடம் புரள்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம். அதேவேளை, அரசாங்கமும் ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் தோன்றியுள்ள கொரோனா பீதி தேர்தலில் தோல்வியை தந்து விடுமோ என்று பயந்திருந்த போதும், பின்னர் அந்தப் பீதியை தேர்தல் வெற்றிக்கான ஒரு உத்தியாக மாற்றிக் கொள்ள முனைந்தது.

கொரோனா பீதி உலகளாவிய பயத்தை தோற்றுவித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பலவும் தமது நாட்டை, நகரங்களை, வீடுகளைத் தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. இதற்காக கடுமையான சட்டங்களையும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்வாறானதொரு நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுக்கக் கூடிய கடும்போக்கிலான நடவடிக்கைகளை மக்கள் புரிந்து கொள்வார்கள், என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. கடுமையான நடவடிக்கை எடுக்காது போனால், அதற்கு தாங்களும் பலியாக நேரிடும் என்று எல்லா மக்களும் அஞ்சுகின்ற நிலையில், இவ்வாறான முடிவுகளுக்கு அவர்கள் கட்டுப்படும் நிலையும் காணப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தெற்கிலுள்ள மக்களுக்கும் கடுமையான நெருக்கடிகளை கொடுத்திருந்த போதும், அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் புலிகளை அழிக்க வேண்டும் என்ற மனோநிலையில் அவர்கள் ஒன்றுபட்டிருந்தார்கள்.

அதுபோலவே கொரோனா விடயத்திலும் இலங்கை மக்கள் ஒன்றுபட்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. கொரோனாவை வெற்றி கொண்டால், அல்லது கொரோனாவைக் கட்டுப்படுத்தவதில் வெற்றியடைந்து விட்டதாக அடுத்த சில வாரங்களில் அரசாங்கம் அறிவித்து விட்டால், அது தேர்தலில் சாதகமான விளைவுகளை அரசுக்கு ஏற்படுத்தும்.

புலிகளை அழித்த பின்னர் 2010 ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் கிடைத்த வெற்றியைப் போன்ற நிலை உருவாகலாம் என்றும் அரசாங்கம் நம்புகிறது. அதைவிட, நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைக்காத எதிர்க்கட்சிகள் சொல்லுகின்ற எதையும் செய்வதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இருக்கிறார்.

அவர், எதிர்க்கட்சி பிளவுபட்டுள்ள இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று விட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நிகழ்த்திய உரையிலும் கூட பலமுள்ள அரசாங்கம் இல்லாததால், தம்மால் எதையும் செய்ய முடியவில்லை என்றும், எனவே பலமான அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

மரண வீட்டில் அரசியல் செய்வது போலவே, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவும், கொரோனா பீதியை வைத்து மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. தேர்தலை பிற்போட தான் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று

அவர் கூறியதும், பலமான அரசாங்கத்தை அமைக்க மக்களின் ஆணையைக் கோரியதும், அவ்வாறான ஒரு விடயம் தான். வீட்டை விட்டு வெளியே வருவதற்கே மக்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். பிரசாரங்களையும் செய்ய முடியாது. கூட்டங்களையும் நடத்த முடியாது. இவ்வாறான நிலையில் தேர்தலை நடத்தும் போது, வயதானவர்களும், நோயாளர்களும் வாக்களிக்க வரப் போவதில்லை. கொரோனா அவர்களைத் தான் இலகுவில் தாக்கும் என்ற அச்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது இவ்வாறான நிலையில் வாக்களிப்பு வீதம் குறைவடையும். அது ஜனநாயக தீர்ப்புக்கு பாதகமானது.

கொரோனா குறித்த உரையிலும் கூட எதிர்க்கட்சியை சாடுவதற்கும், தேர்தலில் பலமான அரசை அமைப்பதற்கான ஆதரவைக் கொருவதற்கும் தான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பயன்படுத்திக் கொண்டிருந்தார். பொதுஜன பெரமுன கொரோனா அச்சத்தில் தேர்தல் பிரசாரங்களை நிறுத்தி விட்டது. பிரதமர் மகிந்த ராஜபக்ச அனைத்து கூட்டங்களையும் நிறுத்தி விட்டார். இவ்வாறான நிலையில் கொரோனா சிறப்பு உரையின் மூலம் அரசியல் செய்ய முனைந்தார் ஜனாதிபதி.

பருப்பு. ரின் மீன் ஆகியவற்றின் விலையைக் குறைத்ததும், கடன்களுக்கான தவணையை நீடிக்க உத்தரவிட்டதும் அரசியல் நலன்களை கருதி எடுக்கப்பட்ட முடிவுகள் தான். இவை தேர்தலில் சாதகமான பெறுபேற்றைத் தரும் என்று அரசாங்கம் நம்புகின்ற நிலையை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், பொதுத்தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதில்லை என்ற தீர்மானம், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டிருக்கிறது.

அரசாங்கத்தின் தலையீடின்றி, நாட்டின் சுகாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியிருக்கிறார். ஏப்ரல் 26இல் தேர்தல் நடத்தப்படாது என்பது தான் இப்போதைக்கு தெரியவந்துள்ளது. எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதை தீர்மானிக்கப் போவது கொரோனா தான். எப்போது அதன் பீதி அடங்குகிறதோ, இயல்பான சூழல் திரும்புகிறதோ, அதுவரை தேர்தல் நடத்தப்படுவது தாமதமாகலாம்.