(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

 ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது குறித்த அறிவித்தலை பிறப்பித்துள்ளது.

இந்த மூன்று நிர்வாக மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான பொலிஸ் ஊரடங்கானது 23 ஆம் திகதி திங்களன்று காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் அன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீள பிறப்பிக்கப்படவுள்ளது.  

அவ்வாறு பிறப்பிக்கப்படும் பொலிஸ் ஊரடங்கு அந்தந்த மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும்.

இந்நிலையில் அவசியம் ஏற்படின் முழு நாட்டுக்கும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படவுள்ளதுடன் அது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

 பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு, அதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு  பொலிசாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  

போதுமான அளவு அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாகவும் அதனால்,  ஊரடங்கு தளர்த்தப்படும் போது பொருட் கொள்வனவுக்கு முந்தியடிக்க வேண்டியதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.  அத்துடன் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.