முகக்கவசங்கள், அணிவதா இல்லையா?

21 Mar, 2020 | 05:43 PM
image

பெய்ஜிங், ( சின்ஹுவா ) கிழக்கு ஆசியாவில் முகக்கவசங்களை மக்கள் அணிவது பொதுவில் காண்க்கூடிய ஒரு காட்சியாக இருந்தது. ஆனால், மேற்குலகில் அது தவிர்க்கப்பட்டது. முகக்கவசங்களை அணிவதா இல்லையா என்ற மக்களின் தீர்மானத்தில் கலாசாரம் முக்கியமான ஒரு பாத்திரத்தை வகிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  ஆனால், கொவிட் -19 கொரோனாவைரஸ் உலகம் பூராவும் பரவிக்கொண்டிருக்கும் நிலையில், முகக்கவசங்களை அணிவது தொடர்பான தீர்மானத்தில் இந்த ஆட்கொல்லி தொற்றுநோய் எந்தளவுக்கு தாக்கத்தைச் செலுத்துகிறது ?

    முகக்கவசங்களை அணிவதா இல்லையா ? இது விடயத்தில் எவரும் எடுக்கக்கூடிய தீர்மானம் அவர் எங்கிருந்து வருகிறார் என்பதிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கிறது. ஆசியாவின் பல பகுதிகளில்  முகக்கவசங்களை பொதுவில் காணக்கூடியதாக இருக்கிறது. மாசடைந்த காற்றில் இருந்து, பக்ரீறியா மற்றும் வைரஸ்களில் இருந்து  தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அல்லது  முகத்தில் இருக்கக்கூடிய குறைபாடுகளை மறைப்பதற்காக மக்கள் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். 

  

ஜப்பானில் பெண்கள்  முக ஒப்பனை செய்துகொள்ளாமல் வெளியில் செல்வது ஒரு நயமான நடத்தை முறையாக இருக்காது. அதனால், முக ஒப்பனை செய்யாமல் வெளியில் செல்ல நேரிட்டால் முகத்தை விரைவாக மறைத்துக்கொள்வதற்காக பெண்கள் அங்கு முகக்கவசங்களை அணிகிறார்கள். ஆனால், மேற்குலக நாடுகளில் முகக்கவசங்களை அணிவது அநாவசியமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கலாம் அல்லது ஒரு களங்கமாகவும் நோக்கப்படலாம் அல்லது இனவெறித் தாக்குதல்களுக்கு உள்ளாகவும் நேரிடலாம்.

      உதாரணமாக, பிரிட்டனின் ஷெவ்வீல்ட்  பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் சீன மாணவர் ஒருவர் கடந்த ஜனவரியில் முகக்கவசத்தை அணிந்து சென்றமைக்காக தூஷிக்கப்பட்டதுடன் உடல்ரீதியான தொல்லைகளுக்கும் ஆளானார் ; கடந்த பெப்ரவரியில் நியூயோர்க்கில் சுரங்கப்பாதை ரயில் நிலையம் ஒன்றில் முகக்கவசத்துடன் காணப்பட்ட ஆசியப் பெண்மணியொருவர் தாக்குதலுக்கு இலக்கானதுடன் ' வியாதிக்காரி ' என்று அவமானப்படுத்தப்பட்டார். 

   ஆசியாவிலும் மேற்குலகிலும் முகக்கவசங்கள் எவ்வாறு நோக்கப்படுகின்றன என்பதில் உள்ள அடிப்படை வேறுபாடொன்றை இந்த இரு சம்பவங்களும் வெளிக்காட்டுகின்றன.

    சின்ஹுவா செய்திச்சேவையினால் அதன் உத்தியோகபூர்வ ருவிட்டர் தளத்தில் முகக்கவசங்கள் தொடர்பில்  கருத்துக்கணிப்பொன்றில் நடத்தப்பட்டது. அதில் கேள்வி கேட்கப்பட்ட 1019 பேரில்  21.5 சதவீதமானோர் கொவிட் -- 19 பரவலுக்கு முன்னர் முகக்கவசங்களை அணிந்தவர்களை நோய்காவிகள் என்று நினைக்கிறார்கள். 65.8 சதவீதமானோர் வளி மாசடைதலில் இருந்து தங்களைப் பாதுகாப்பதற்காக முகக்கவசங்களை மக்கள் பயன்படுத்துவதாக நம்புகிறார்கள். முகக்கவசங்களை அணிவதா இல்லையா என்ற தங்களது தீர்மானத்தில் கலாசாரம் முக்கியமான பாத்திரத்தை வகிக்கிறது என்று பலர் கருத்து தெரிவித்தார்கள். கலாசார ரீதியில் ஏற்புடையதல்ல என்பதால் ஆசிய நாடுகளைச் சேர்ந்த பலர் சமூக நெருக்குதலின் கீழ் முகக்கவசங்களை அணியும் பழக்கத்தை தவிர்க்கிறார்கள்.

 

பொது எதிரி, கூட்டு பொறுப்புணர்வு 

  ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கணனி அறிவியல் மற்றும் பொறியியல் நிலையத்தின் ஆகப்பிந்திய புள்ளிவிபரங்களின்படி கொவிட் -- 19 உலகின் 158 நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் பரவி 218,000 க்கும் அதிகமானவர்களுக்கு தொற்றியிருக்கும் நிலையில், இந்த ஆட்கொல்லி நோயில் இருந்து உலக சமுதாயம் எதிர்நோக்கும் சவால் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

முகக்கவசங்களை அணிவது தொடர்பிலான மக்களின் தீர்மானத்தில் கொவிட் -- 19 கொரோனாவைரஸ் செலுத்துகின்ற தாக்கம் தொடர்பில் சின்ஹுவாவினால் அண்மையில்  நடத்தப்பட்ட முகநூல் கருத்துக்கணிப்பொன்ன்றின் பிரகாரம் இது கலாசாரத்தைப் பற்றியது மாத்திரமல்ல, மக்கள் சமூகத்துக்கு இருக்கின்ற கூட்டுப்பொறுப்புணர்வு சம்பந்தப்பட்டதுமாகும் என்று பலர் நினைக்கிறார்கள்.

 " முகக்கவசங்களை அணிவது கலாசாரத்தைப் பற்றியதல்ல, அது எம்மை நாமே பாதுகாத்துக்கொள்வதுடன் சம்பந்தப்பட்டது, நோயுற்றிருக்கக்கூடிய எமது அன்புக்குரியவர்களையும் மற்றவர்களையும் கூட பாதுகாப்பதுடன் தொடர்புடையது " என்று அல்பேர்ட் ஜோசப் றபிஸ்கால் றடோக் என்ற நெற்றிசன் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

 ஆனால், முகக்கவசத்தை அணிவதன் முக்கியத்துவத்தை ஏற்கெனவே புரிந்துவிளங்கிக்கொண்டிருக்கக்கூடிய மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்களைப் பொறுத்தவரை, முகக்கவசங்களுக்கும் மருத்துவ விநியோகங்களுக்கும் நிலவுகின்ற தட்டுப்பாடு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. 

 " இத்தாலியின் லொம்பார்டி பகுதிக்கு அடுத்ததாக வசிக்கின்ற நான் இப்போது ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலமாக முகக்கவசங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால், அதிகாரிகள் முறையாக ஒழுங்குகளைச் செய்யவில்லை என்பது ஒரு பிரச்சினையாக இருக்கிறது. பார்மசிகளில் முகக்கவசங்களை இனிமேலும் பெறமுடியாமல் இருக்கிறது" என்று றிக் பிறிம் என்பவர் விசனத்துடன் கூறினார். காலந்தாழ்த்துவதை விடவும் இப்போதாவது முகக்கவசங்களை அணிவது நல்லது என்று சிறில் மொறாஸ் எனபவர் கூறினார்.

 கொவிட் -- 19 கொரோனாவைரஸின் தொற்றுக்கு இலக்கான ஒருவரின் இருமலின்போது அல்லது அவர் மூச்சை உள்வாங்கும்போது அவரின் மூக்கில் இருந்து அல்லது வாயில் இருந்து  வருகின்ற சுவாசம்சார்ந்த சிறுதுளியின் மூலமாகவே பொதுவில் தொற்று ஏற்படுகிறது என்பதால் கொரோனாவைரஸை தடுப்பதில் முகக்கவசங்களின் பயன்தரும் ஆற்றல்  குறித்து மருத்துவ நிபுணர்கள் கலப்பான சிந்தனையையே கொண்டிருக்கிறார்கள்.

 கைகளைக் கழுவுதல் கூடுதல் முக்கியத்துவமுடையது என்று சில நிபுணர்கள் வாதிடுகின்ற அதேவளை, கொவிட் -- 19 வைரஸ் தொற்றியிருப்பதற்கான அறிகுறிகளைக் கொண்டிருப்பவர்களிடமிருந்து தொற்று ஏற்படுவதைத் தடுக்க முகக்கவசங்கள் உதவமுடியும் வேறு சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களின் பயன்பாட்டுக்கான கையிருப்புகள் குறைந்துவிடக்கூடும் என்பதால், முகக்கவசங்களை வாங்குவதை அமெரிக்கர்கள் நிறுத்தவேண்டும் என்று அமெரிக்க சேர்ஜன்ற் ஜெனரல் ஜெரோம் அடம்ல் வலியுறுத்திக்கேட்டிருக்கிறார்.

   

" பொதுமக்களுக்கு கொரோனாவைரஸ் தொற்றுவதைத் தடுப்பதில் முகக்கவசங்கள் பயனுறுதியுடையவையாக இல்லை.ஆனால், நோயுற்றிருப்பவர்களை கவனிக்கும் சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்கள் முகக்கவசங்களைப் பெறமுடியாமல்போகுமேயானால் அதனால் அவர்களும் எமது சமுதாயமும் ஆபத்துக்குள்ளாக நேரும் " என்று அடம்ஸ் ருவிட்டரில் எழுதியிருக்கிறார்.

  சீனாவில் கொவிட் -- 19 வைரஸினால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுவருகின்றது. தொழில்துறை அதன் செயற்பாடுகளை படிப்படியாக மீண்டும் தொடங்குகின்றது.அங்கு  பொது இடங்களில் முகக்கவசங்களை அணிந்திருக்கவேண்டும் என்பது இனிமேலும் கட்டாயமானதாக இல்லை. அதேவேளை, பெரும்பாலான மேற்கு நாடுகளில் முகக்கவசங்களை அணியுமாறு மக்களுக்கு ஆலோசனை கூறப்படுகின்றது.என்றாலும் பலர் வெளியில் செல்லும்போது முகக்கவசங்களை அணியாமல் இருக்கவே விரும்புகிறார்கள்.

  எது எவ்வாறிருந்தாலும், முகக்கவசங்களை அணிவதா இல்லையா என்பது  ஆழமாக வேரூன்றிய ஒரு  கலாசார விடயமாகும். உலகளாவிய தொற்றுநோய் தற்போதைக்கு அதை மாற்றியிருக்கலாம்.... ஆனால், அதற்கு பிறகும் இந்த மாற்றம் தொருமா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21