(ஆர்.ராம்)

நாடாளவிய ரீதியில் நாளாந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்தும் ஆயிரக்கண்கானவர்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்விதமான கரிசனையைக் கொண்டிருக்கின்றது என்று மனோகணேசன், சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவு காலத்தில் அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் அரசாங்கத்திடம் உள்ள திட்டங்கள் என்ன என்பது தொடர்பில் பகிரங்க அறிவிப்பினைச் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “நாளந்த வருமானத்தில் வாழும் நகர சுமை தொழிலாளர் மற்றும் தெரு வியாபாரிகள் ஊரடங்கு முழு அடைப்பினால் திக்கற்று தவிக்கிறார்கள். நாம் எம் மட்டத்தில் உதவ ஆரம்பித்துள்ளோம்.

அரச இயந்திரம் பொறுப்பேற்று நிவாரணம் வழங்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலையிட வேண்டும்” என்று கோரியுள்ளார்.

இதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் செயலாளர் சிவசக்திஆனந்தன், போருக்கு பின்னரான சூழலில் பெண் தலைமைத்துவத்தினைக் கொண்ட குடும்பங்கள் அனைத்தும் நாளாந்த வருமானத்தினை ஈட்டும் தொழில்களுக்கே சென்று வருகின்றார்கள். ஆகவே தற்போதைய சூழலில் அவர்களின் நிலையறிந்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரியுள்ளார்.

அதேநேரம், புளொட் தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ரெலோ தலைவர் செல்வம்

அடைக்கலநாதன் ஆகியோரும் இந்தவிடயத்தினை வலியுறுத்தியுள்ளதோடு நாள் வருமானம் பெறும் அனைத்து தரப்பினருக்கு அடிப்படைத்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான நிவாரண வசதிகளை வழங்குவதற்கு உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.