இராணுவத்தினர் மற்றும் அவர்களின் பராமரிப்பிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும் விசேட வரப்பிரசாதங்கள் அடங்கிய 'விருசர வரப்பிரசாத' அட்டைகள் வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பொலநறுவையில்  நடைபெறவுள்ளது.  

ஜனாதிபதியின் ஆதரவுடனும் பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்புடனும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு முன்னெடுத்துள்ள இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நிகழ்வு அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்திட்டம் வெற்றியளித்துள்ளதாலேயே அதன் இரண்டாம் கட்டம் முன்னெடுக்கப்படுகிறது.   

உயிர்நீத்த இராணுவ வீரர்களின் குடும்பங்கள், ஊனமுற்ற, ஓய்வு பெற்ற, தற்போது சேவையிலுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு இந்த அட்டை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுகாதாரம், கல்வி, வங்கி, போக்குவரத்து உட்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் அரச மற்றும் தனியார் துறை சேவைகளின் போது குறித்த அட்டை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சலுகை வழங்கப்படுகிறது.