கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்பரப்பில் இரு ஏவுகணைகளை வடகொரியா ஏவிப் பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா இராணுவம் இன்றைய தினம் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் இருந்தே இந்த ஏவுகணைகள் இன்று அதிகாலை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் துப்பாக்கி சூடு பயிற்சிகளில் ஒரு பகுதியாக வடகொரியா பல ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தென்கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரி, இந்த ஏவுகணைகளானது 50 கிலோ மீற்றர் உயரத்தில் 410 கிலோ மீற்றர் தூரம் வரை பயணம் செய்துள்ளது.

கொரோனா தொற்று வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வாறான நடவடிக்கைகளானது மிகவும் பொருத்தமாற்றது என்று அறிவித்துள்ளார்.

இதேவளை ஜப்பானின் கடலோர காவல்படை ஒரு ஏவுகணை அதன் கடற் பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந் நிலையில் அமெரிக்காவும் சீனாவும் பியோங்யாங்கிற்கு அதன் அணு மற்றும் ஏவுகணை சோதனைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.