ஆராவாரமின்றி 2020 டோக்கியோ ஒலிம்பிக் தீபமானது ஏதென்ஸிலிருந்து ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்துக்கும், விமர்சனங்களுக்கும் மத்தியில் 32 ஆவது ஒலிம்பிக் போட்டிகளை எதிர்வரும் ஜூலை மாதம் 24 முதல் ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி வரை ஜப்பானின் டோக்கியோவில் நடத்த ஒலிம்பிக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டது. பின்னர் தீபம் ஜப்பான் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபத்துடன் ‘டோக்கியோ 2020’ என்ற பெயரிலான சிறப்பு விமானம் ஏதென்சில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. 

அந்த விமானம் ஜப்பானின் ஹிகாஷிமாட்சுஷிமாவில் உள்ள விமானப் படை தளத்துக்கு நேற்று சென்றடைந்தது.

வழக்கமாக ஒலிம்பிக் தீபம் கொண்டு வரப்படும் போது அதை வரவேற்கும் விதமாக கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்படும்.

இந் நிலையில் கொரோனா அச்சத்தால் அத்தகைய நிகழ்ச்சிகள் எதுவும் இதன்போது இடம்பெறவில்லை. 

இதனால் ஆரவாரமும், கோஷமும் இன்றி தீபம் ஜப்பானுக்குள் நுழைந்தது. அதை டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி பெற்றுக் கொண்டார். 

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன்கள் சாவ்ரி யோஷிடா, தடாஹிரோ நோமுரா ஆகியோர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தனர். 

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் முழுவதும் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.