உலகெங்கும் மோதல்கள் காரணமாக 65.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்வு ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையம் உலகெங்கும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள அகதிகளின் தொகை ஒருபோதும் இல்லாவகையில் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையம் நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது. 

உலக அகதிகள் தினத்தைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட ஆண்டறிக்கையிலேயே அந்த நிலையம் இவ்வாறு தெரிவித்துள்ளது. 

உலகளாவிய அகதிகள் தொகையானது முதல் தடவையாக 60 மில்லியனை தாண்டியுள்ளதாக அந்த நிலையம் கூறுகிறது. 

கடந்த ஆண்டின் இறுதியில் அகதிகளாகவோ அல்லது புகலிடக்கோரிக்கையாளர்களாகவோ 65.3 மில்லியன் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளதாக அந்த நிலையம் கூறுகிறது. 

மேற்படி இடம்பெயர்ந்தவர்கள் தொகையானது ஒரு வருட காலப் பகுதியில் 5 மில்லியனால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த இடம்பெயர்ந்தவர்கள் தொகை பூமியிலுள்ள ஒவ்வொரு 113 பேருக்கும் ஒருவர் என்ற அடிப்படையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையம் கூறுகிறது. 

மேலும் இது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் இடம்பெற்ற மாபெரும் இடம்பெயர்வாக உள்ளது. 

கடந்த ஆண்டில் ஒவ்வொரு நிமிடத்திலும் 24 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 

மேற்படி அகதிகளில் 54 சதவீதமானவர்கள் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய 3 நாடுகளை மட்டுமே சேர்ந்தவர்களாவர். 

அத்துடன் இடம்பெயர்ந்த அனைத்து அகதிகளிலும் அரைப் பங்கானவர்கள் 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களாவர். 

மேலும் உலக அகதிகளில் 86 சதவீதமானவர்கள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவர் நிலையம் தெரிவிக்கிறது. 

உலகில் அதிகளவில் அகதிகள் தஞ்சமடைந்துள்ள நாடாக துருக்கி உள்ளது. அங்கு 2.5 மில்லியன் பேர் அகதிகளாகவுள்ளனர். அதற்கு அடுத்து அதிகளவு அகதிகளைக் கொண்ட நாடுகளாக முறையே பாகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் விளங்குகின்றன. 

கடந்த வருடத்தில் ஐரோப்பாவை 1,001,700 அகதிகள் கடல் மார்க்கமாக வந்தடைந்துள்ளதாக சர்வதேச புலம்பெயர்தல் தொடர்பான அமைக்கு தெரிவிக்கிறது. 

அதேசமயம் தரை வழியாக ஐரோப்பாவை சுமார் 35,000 பேர் வந்தடைந்துள்ளனர். 

ஐரோப்பாவை வந்தடைந்துள்ள பலரின் இலக்கு ஜேர்மனி மற்றும் சுவீடன் ஆகிய செல்வந்த நாடுகளுக்குச் செல்வதாகும். எனக் கூறப்படுகிறது.