அமெரிக்காவின் நியுஜேர்சியில் கொரோனா வைரஸ் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்ப நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் 73 வயது கிரேஸ் புஸ்கோவும் அவரது பிள்ளைகளும் நோய்வாய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் கிரேஸ் புஸ்கோவின் நான்கு பிள்ளைகள் பின்னர் உயிரிழந்துள்ளனர்.

கத்தோலிக்க பாடசாலை ஆசிரியையான ரீட்டா புஸ்கோ ஜக்சன்- 55 முதலில் உயிரிழந்துள்ளார்.

அவர் வேறு எந்த நோயினாலும் பாதிக்கப்படவில்லை என மாநில சுகாதார ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் கார்மைன் புஸ்கோ உயிரிழந்துள்ளார்.

இதற்கு சில மணிநேரத்தில் அவர்களின் தாயார் கிரேஸ் புஸ்கோவும் உயிரிழந்துள்ளார்.

தனது பிள்ளைகள் இருவர் ஏற்கனவே உயிரிழந்ததை அறியாமலேயே அவர் உயிரிழந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதியாக வியாழக்கிழமை தனது தாய் உயிரிழந்த மருத்துவமனையிலேயே வின்சென்ட் உயிரிழந்துள்ளார்.

இந்த உயிரிழப்புகளை தொடர்ந்து குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 19 பேர் தங்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.ஒரு வார காலத்திற்கு பின்னரே அவர்களின் மருத்துவபரிசோதனைகள் வெளியாகும்.

இதேவேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத குடும்ப உறுப்பினர்களின் மருத்துவபரிசோதனை முடிவுகளை ஏன் வெளியிடக்கூடாது எ கேள்வி எழுப்பியுள்ள குறிப்பிட்ட குடும்ப உறவினர் ஒருவர் இதுபொது சுகாதார நெருக்கடி என சுட்டிக்காட்டியுள்ளார்.

வைரஸ் காரணமாக அழிக்கப்பட்டுள்ள ஒரு குடும்பத்தை விட ஏன் விளையாட்டு வீரர்களுக்கும் பிரபலங்களிற்கும் ஏன் முக்கியத்துவம் வழங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது எங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள தாங்க முடியாத துயரம் என அவர் தெரிவித்துள்ளார்.