இந்து ஆலயங்களில் திருவிழாக்களையும் மகோற்சவங்களையும் தவிர்க்குமாறு வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் நிர்வாகத்தினரால் வவுனியா ஆதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இவ் கோரிக்கையில்,

நாட்டில் பேசுபொருளாகவும் அச்சுறுத்தல் விடுக்கும் விடயமாகவும் கருதப்படும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் இடம்பெறும் நித்திய நைமித்திய பூஜை நிகழ்வுகளின் போது மக்கள் கூடுவதைத் தவிர்த்து ஆலயக் கடமைகளை நிறைவேற்றவேண்டுமென அனைத்து இந்து ஆலயங்களின் பரிபாலன சபையினருக்கும் பக்தர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்துக்களின் கடமையாக இருக்கும் நித்திய நைமித்திய பூஜைகளை சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையிலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறும் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதுடன், திருவிழாக்கள், மகோட்சவங்களை தற்காலிகமாக தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அனைத்து ஆலயங்களின் நிர்வாகத்தினரையும் தமது அலயத்தின் ஒலிபெருக்கி மூலமாக அறிவுருத்த உள்ளதுடன்  கொரோனா பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை அனைத்து ஆலயங்களின் நிர்வாகத்தினருக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்  வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் தெரிவித்திருந்தனர்.