(செ.தேன்மொழி)

சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தும் சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினரான குறித்த நபரை நேற்று வியாழக்கிழமை ஆடியம்பலம பகுதியில் வைத்து கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

சமூகவலைத்தளங்களுடாக வெளிவந்திருந்த இந்த சர்ச்சைக்குரிய காணொளி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துவந்ததுடன் , இரசாயனபகுப்பாய்வு மற்றும் தொலைபேசி அழைப்பு வாயிலாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதனடிப்படையிலே சிறுமியை அடையாளம் காணுவதன் ஊடா சந்தேக நபரை விரைவில் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், முதலில் சிறுமியை அடையாளம் காண தீர்மானித்த பொலிஸார் , அதற்காக தமக்கு உதவுமாறு பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். 

இந்நிலையிலேயே நேற்று வியாழக்கிழமை ஆடியம்பலம பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

36 வயதுடைய இவர் சிறுமியின் உறவினர் எனவும் , பல தடவைகள் இவர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக சட்டவைத்திய அதிகாரியிம் அனுமதித்துள்ள பொலிஸார், சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், அவரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.