தென் மெக்ஸிக்கோவில் தொழிற்சங்க ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட ஈடுபட்ட ஆசிரியர்களுக்கும் பொலிஸாருக்குமிடையே இடம்பெற்ற மோதலில் 6 பேர் பலியானதுடன் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட நூறுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். 

ஒயக்ஸகா மாநிலத்தில் அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் ஊழலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு உயர் மட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

மேற்படி அடிப்படைவாத செயற்பாட்டு வரலாற்றைக் கொண்ட சி.என்.ரி.ஈ. தொழிற்சங்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதையடுத்து அந்த தொழிற் சங்கத்தின் உறுப்பினர்கள் வீதிகளை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சம்பவ தினம் வீதிகளை மறித்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார் கலைக்க முயன்ற போது அந்த வீதியின் இரு மருங்கிலுமிருந்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் அதனைத் தொடர்ந்தே அங்கு பெரும் மோதல் இடம்பெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

நொசிக்ஸ்ட்லன் நகரில் இடம்பெற்ற மேற்படி மோதலின் போது அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் துப்பாக்கிகள் இருக்கவில்லை என மெக்ஸிக்கோ தேசிய பாதுகாப்பு ஆணையகம் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது. 

எனினும் அந்நாட்டு பொலிஸ் தலைவர் என்றிக் கலின்டோ பின்னர் தெரிவிக்கையில், இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்ட சூட்டையடுத்து அங்கு ஆயுதம் ஏந்திய பொலிஸ் படையணி அனுப்பப்பட்டதாக கூறினார்.