(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை எனப்படும் றாகம வைத்தியசாலையில், தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை மறைத்து வேறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு, கொரோனா தொற்று இருப்பது பின்னர் தெரியவந்த நிலையில், வேண்டுமென்று கொரோனா தொற்றை மறைத்தமை தொடர்பில் அந்த தொற்றாளருக்கு எதிராக வத்தளை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

றாகம போதனா வைத்தியசாலையில் அண்மையில்  சாதாரண நெஞ்சு வலி எனக் கூறி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பின்னர் இரு நாட்கள் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

சாதாரண நெஞ்சு வலிக்கு சிகிச்சையளிக்கும் போது வைத்தியர்கள், தாதியர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள்  கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதால், பின்னர் அந்த நோயாளிக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில் அவ்வாறு சிகிச்சையளித்த வைத்தியர்கள், தாதியர், வைத்தியசாலை ஊழியர்கள், அந்த சிகிச்சை அறையில் அருகே இருந்த ஏனைய நோயாளர்கள் என அனைவரும் தற்போது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 இந்நிலையிலேயே தனது நோய் நிலைமைகளை மறைத்தமை தொடர்பில் குறித்த கொரோனா தொற்றாளருக்கு எதிராக பொலிஸார் வத்தளை நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.