அதிக சன நெருக்கடி மிக்க பகுதிகளில் வாழும் மக்கள், தங்களைப் பாதுகாப்பதோடு சுற்றத்தாரையும் பாதுகாக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியில் மனோ கணேசனுடன் இணைந்து கொழும்பில் போட்டியிடும் விநாயகமூர்த்தி ஜனகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே ஜனகன் இவ்வாறு கோரியுள்ளார்.

 அவ்வறிக்கையில் மேலும் கூறுகையில்,

“உலகை அச்சுறுத்தி மனித உயிர்களைக் காவு கொண்டுவரும் கொடிய கொரோனா வைரஸிடமிருந்து நாட்டுமக்கள் தம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

குடிவரவு-குடியகல்வு பிரிவினரது முறையான திட்டமிடல் இல்லாமையும், அரசின் அசமந்த போக்கின் காரணமாகவும் நாட்டுக்குள் கொரோனா நுழைந்துவிட்டது. 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கும் ஏனைய நாடுகளோடு ஒப்பீட்டளவில் நோக்கும் போதும், இவ் வைரஸ் இலங்கையில் அதிவேகமாக வியாபித்து வருவதைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

“நோய் தொற்றுக்குள்ளானவர்கள் பொறுப்பில்லாமல் பல்வேறு பிரதேசங்களுக்கும், இடங்களுக்கும் பயணித்திருக்கின்றனர். இதன்காரணமாக இன்னும் பலர் தொற்றுக்குள்ளாகியிருக்க வாய்ப்புகள் அதிகம். அவர்கள் மூலம் ஏனையோரையும் தாக்கும். 

ஆகவே சுயமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் வெளிப்பயணங்களைத் தவிர்த்து வீட்டினுள் இருப்பதுவே சாலச்சிறந்தது. 

“இந்த வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டாலோ, அல்லது உடல் நிலையில் அசாதாரண தன்மை காணப்பட்டாலோ விரைந்து மருத்துவ தரப்பினரை நாட வேண்டும்.

குறிப்பாக தலைநகர் கொழும்பில் எம்மவர்களின் குடியிருப்புகள் மிகவும் நெருக்கமானவை. சிறிய நிலப்பரப்பில் அதிக மக்கள் வசிக்கும் சுற்றாடலில் இவ்வாறன தொற்றுகள் பாரியளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தவல்லன.

“ஆகவே முடிந்தளவு கவனமாகவும், அவதானமாகவும் இருந்து தங்களையும், சுற்றத்தாரையும் பாதுகாக்க முன்வருமாறு உங்கள் மீது அதீத அக்கறை கொண்டவன் என்கின்ற வகையில் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார்.