(எம்.மனோசித்ரா)

யுத்தத்தை நிறைவு செய்ததைப் போன்று முப்படையினரைக் கொண்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. மருத்துவத்துறை சார்ந்தவர்களின் கைகளிலேயே தற்போது நாட்டு நிலைவரம் தங்கியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 5 வருட கால ஆட்சியில் எம்மால் ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டு அவற்றுக்கு வழங்கப்பட்ட உரிமையின் காரணமாகவே அரசியல் ரீதியான தீர்வை புறந்தள்ளி தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை ஒத்தி வைப்பதற்கு சுதந்திரமாக முடிவை எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

யுத்தத்தின் போது முப்படையினரைக் கொண்டு பயங்கரவாதத்தை ஒழித்ததைப் போன்று அப்போதைய பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் கொரோனா வைரஸையும் கட்டுப்படுத்த முடியும் என்று எதிர்பார்ப்பது தவறாகும் என்றும் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தவுடனேயே தேர்தல்கள் ஆணைக்குழு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தினத்தை அறிவிக்காமல் தேர்தலை ஒத்தி வைத்துள்ளது.

எனினும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும் சுகாதார அமைச்சரும் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது என்றும் அதற்கான அவசியம் இல்லை என்றும் தெரிவித்து வந்தனர். அவ்வாறான அரசியல் ரீதியான தீர்மானங்களை மீறி தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக தீர்மானமெடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். காரணம் தற்போது தேர்தலில் வெற்றி பெறுவது முக்கியமல்ல. நாட்டைப் பாதுகாப்பதே முக்கியமாகும்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முதன் முறையாக தமது கடமைக்கு உரிய கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். இத்தாலி ஆரம்ப கட்டத்திலேயே அசமந்தமாக செயற்பட்டமையினாலேயே தற்போது வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

எனினும் சுகாதார அமைச்சர் இதன் பாரதூரத்தன்மையை விளங்கிக் கொள்ளவில்லை. இருந்து போதிலும் கூட நாட்டில் ஆணைக்குழுக்களை அமைத்து அவற்றுக்கு நாம் பெற்றுக் கொடுத்துள்ள உரிமைகள் இன்று நன்மையளித்துள்ளன.

வைரஸ் பரவல் நிலைவரத்தை அவதானிக்கும் போது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் பரவல் வேகம் அதிகரித்துள்ளது. இது குறித்தே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். மாறாக போலி செய்திகளை பரப்புபவர்களை கைது செய்வது நேர வீண்விரயமாகும். போலி செய்திகள் பரப்பட்டால் அரசாங்கத்தால் அந்த செய்தி உண்மைக்கு புறம்பானது என்ற அறிக்கை வெளியிடப்பட்டால் மாத்திரமே போதுமானதாகும்.

பொலிஸ் ஆணைக்குழு இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, அரச சேவை ஆணைக்குழு மற்றும் நீதி சேவை ஆணைக்குழு என்பவற்றைப் போன்று பொலிஸ் ஆணைக்குழுவும் சுயாதீனமாக இயங்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.