(எம்.எப்.எம்.பஸீர்)

புத்தளம் நிர்வாக மாவட்டம் முழுவதிலும் இன்று பிற்பகல் 2.00 மணி முதல் மீளவும்  பொலிஸ் ஊரடங்கு சட்டம்  அமுல் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக நீர்கொழும்பு பொலிஸ்  வலயத்தின் கொச்சிக்கடை பொலிஸ் அதிகார பிரிவுக்கும்  மீள இந்த ஊரடங்கு அமுல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், 1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தொற்று நோய் காரணமாக தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டம் (1954 ஆம் ஆண்டு திருத்தம்) மற்றும் அது சார்ந்த கட்டளைகள் மீறப்படுவதை  தடுக்கும் முகமாக   ஊரடங்கு மறு அறிவித்தல் வரை  நேற்று மாலை 4.30 முதல் பிறப்பிக்கப்பட்டுவதாக  பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அறிவித்திருந்தார். 

இது குறித்த அறிவித்தலை அவர், புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார். எனினும் அந்த ஊரடங்கு இன்று காலை 8.00 மணிக்கு அகற்றப்பட்டது. இந் நிலையிலேயே மீள இன்று 2.00 மணிக்கு மீள  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, புத்தளம் நிர்வாக மாவட்டத்தில் புத்தளம் பொலிஸ் வலயத்தில்  11 நிலைய அதிகார பிரிவுகளிலும் , சிலாபம் பொலிஸ் வலயத்தின்  7 பொலிஸ்  அதிகார பிரிவுகளிலும் நீர்கொழும்பு பொலிஸ் வலயத்தின்  கொச்சிக்கடை பொலிஸ்  அதிகார பிரிவுகளிலுமாக 19 பொலிஸ் அதிகார பிரிவுகளில் இந்த ஊரடங்கு மறு அறிவித்தல் வரை அமுல் செய்யபப்டுவதாக பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.