கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக  வெளி மாவட்டங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருபவர்களை அவதானமாக கண்காணிப்பது அவசியம் என மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (19) மதியம் இடம் பெற்ற 'கொரோனா வைரஸ்' தொடர்பாக இடம்பெற்ற இரண்டாவது முன் ஆயத்த கூட்டத்தில் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

'கொரோனா வைரஸ்' தொடர்பான  2 ஆவது முன்னாயத்த கூட்டம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில்  மன்னார் மாவட்டச் செயலகத்தில்  இடம் பெற்றது.

குறித்த  கலந்துரையாடலின் போதே இவ் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.குறிப்பாக 

இலங்கையில் 'கொரோனா வைரஸ்' தொற்றுக்கள் அடையாளம் கானப்பட்ட பின்  வெளி நாடுகளில் இருந்து புத்தளம் மாவட்டத்திற்கு வருகை தந்த அதிகளவானவர்கள்  

உரிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் புத்தளம் மாவட்டத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய பின் அங்கு ஊரடங்கு சட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவை நீக்கப்பட்ட பின் புத்தளம் மாவட்டத்தில் உள்ளவர்கள் மன்னார் மாவட்டத்திற்குள்  உந்துருளிகளிலும் வாகனங்களிலும் அதிகமாக வருகை தருகின்றார்கள்.

 அவர்களை  முறையாக கண்கானித்து  சோதனைச்சாவடிகள் மூலம் பதிவுகளை மெற்கொண்டு  மட்டுப்படுத்தும் படி கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

தேவையில்லாமல் வெளி மாவட்டத்தவர்கள் கிராமப் புறங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டிருந்தால் பிரதேச செயலகங்கள் மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கும் படியும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில்   தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவ கட்டளைத்தளபதி, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான எஸ்.வசந்தகுமார் ,சி.குணபாலன் ,மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரி கே. திலீபன், மன்னார் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி  மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் மா.பிரதீப் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ.கேதீஸ்வரன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.