(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டுள்ள பயணத்தடைகளின் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்புவதில் சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ள இலங்கையர்களின் வீசாக்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க வெளிநாட்டு அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு தெரியப்படுத்துவதற்கான தொடர் மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று வியாழக்கிழமை வெளிநாட்டு தூதுவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் போது வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டிலுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து வகையான வீசாக்களுக்கும் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த 17 ஆம் திகதி முதல் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்ற பரஸ்பர ஏற்பாடுகள் ஒரு பொதுவான நடைமுறையாவதுடன், இந்த விதிவிலக்கான காலப்பகுதியில் பயணங்களை மேற்கொள்பவர்கள் எதிர்கொள்ளும் பதற்றங்களைக் குறைப்பதற்கு இலங்கையர்களுக்கு இது வசதிகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கின்றோம் என்று குறிப்பிட்டார்.