புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடை ஆகிய பிரதேசங்களின் பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் காலை (19/03/2020) 8 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

அத்துடன் குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகளில் மீண்டும் இன்று பிற்பகல் 2 மணிமுதல் மறுஅறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அதிகார பிரதேசத்திற்கு உட்பட்ட முந்தல், கல்பிட்டி, வண்ணாத்திவில்லு, ஆணமடுவ, புத்தளம், சாலியவெவ, பள்ளம, நவகத்தேகம, கருவலகஸ்வெவ, நுரைச்சோலை, உடப்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும், சிலாபம் பொலிஸ் அத்தியட்சகர் அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட வென்னப்புவ, கொஸ்வத்தை, மாரவில, சிலாபம், மாதம்பை, ஆராச்சிக்கட்டு, தங்கொட்டுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும், நீர்கொழும்பு பொலிஸ் அத்தியட்சகர் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும் நேற்று மாலை 4.30 மணிமுதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

குறித்த பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று மாலை 4.30 மணி முதல் அமுல்படுத்தப்பட்டது.

குறிப்பாக கொரோனா தொற்று நாட்டில் வேகமாக பரவிவருவதானாலும் இத்தாலி மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து பலர் வந்து புத்தளம் மாவட்டத்தை அண்டிய பகுதிகளில் தங்கியிருப்பதாலும் குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்ற காலப்பகுதிக்குள் குடியிருப்பாளர்கள் தத்தமது வீடுகளுக்குள்ளேயே இருத்தல் வேண்டும் என்பதுடன், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதிக்குள் மக்கள் தங்களின் பயணங்களை கட்டுப்படுத்திக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்தல் அவசியம் என பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் குறிப்பிட்ட பகுதிகளின் ஊடாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என பதில் பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்னவின் கையொப்பத்துடன் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.