கொரோனா வைரஸ் காரணமாக விமானங்கள் இரத்து செய்யப்பட்டதால், சவுதியில் இருந்த மணமகனும் இந்தியாவின் தெலுங்கானாவில் இருந்த மணமகளும் காணொளி தொலைபேசி வழியாக திருமணம் செய்து புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் கோத்தேகுடம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது அத்னன் கான். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதே மாவட்டம் குண்டலாவைச் சேர்ந்த ஷேக் அப்துல் நபி என்பவரின் மகள் ஷபனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களின் திருமணம், கடந்த 15 ஆம் திகதி கம்மத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக முகமது அத்னன் கான், சவுதியில் இருந்து விமானம் மூலம் தெலுங்கானா மாநிலம் வர இருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திடீரென விமான போக்குவரத்து இரத்து செய்யப்பட்டதால், அவரால் முன்னதாக வர முடியவில்லை. வேறு நாடு வழியாக வர முயற்சித்தும் முடியவில்லை.

இதனிடையே, திருமண நாளும் வந்தது. மணமகன் மற்றும் மணப்பெண் வீட்டார் மண்டபத்தில் காத்திருந்தபோது, 'தன்னால் திருமணத்திற்கு வர முடியவில்லை' என, முகமது அத்னன் தொலைபேசியில் கூறினார். உடனே, தொலைபேசி காணொளி வழியாக திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். மணமகனும் மணமகளும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து, தொலைபேசி காணொளி  மூலம் மணமகன் முகமது அத்னன் திரையில் தோன்ற, இங்கு மணப்பெண் அமர்ந்திருக்க, இஸ்லாமிய வழக்கப்படி, 'நிக்காஹ்' சடங்குகள் நடைபெற்று திருமணம் இனிதே முடிந்தது. திருமணத்திற்கு வந்திருந்தோர், தொலைபேசி வழியாகவே மணமகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.