நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு புத்தளம் மாவட்டத்திற்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோகண தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 4.30 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக கொரோனா தொற்று நாட்டில் வேகமாக பரவிவருவதானாலும் இத்தாலி மற்றும் ஏனைய நாடுகளில் இருந்து பலர் வந்து புத்தளம் மாவட்டத்தை அண்டிய பகுதிகளில் தங்கியிருப்பதாலும் குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு,  கொச்சிக்கடை ஆகிய பகுதிகளுக்கே பொலிஸ் இன்று மாலை 4.30 மணி முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வருகை தந்தவர்களில் 800 பேர் புத்தள மாவட்டத்தில் தங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், குறிப்பாக கொரோனா வைரஸ் வேகமாக பரவிய நாடுகளில் இருந்து மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 10 ஆம் திகதிக்குள் வந்த பலர் சுய  தனிமைபப்டுத்தலுடன் கூடிய தொர்று நீக்கல் நடவடிக்கைகளுக்கு உட்படாது நடமாடி வருகின்றனர். உண்மையில் இது எமது நாட்டு மக்களின் ஒழுக்கம் சார் பிரச்சினை.

சுகாதார சேவைகள் அதிகாரிகள்,  அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், அவர்கள் அதனை கணக்கில் கொள்ளாமல் செயற்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொர்று பரவுவதற்கான ஆபத்து அதிகமான இடமாக புத்தளம் மாவட்டம் உள்ளது.

இத்தாலியில் இருந்து, மார்ச் முதலாம் திகதிக்கும் 10 ஆம் திகதிக்கும் உட்பட்ட காலத்தில் வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படாத பலர்  புத்தளம் முழுவதும் உள்ளனர்.

அவ்வாறு அவர்கள் தொடர்ந்தும் சுகாதார ஆலோசனைகளை புறக்கணித்தால் புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கான போக்கு வரத்து உள்ளிட்டவை முடக்கப்படலாம். அவ்வாறு அவர்கள் தொடர்ந்தும் பொறுப்பற்று செயற்பட்டால் முடக்கல் குறித்த செயற்பாட்டுக்கு நாம் தள்ளப்படலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 09 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை.

தற்போதைய நிலையில் இவர்களூடாக கொரோனா தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

அக்காலப்ப்குதியில் சுமார் 1500  முதல் 2000 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியதுடன் இவர்களில் 800 பேர் வரை புத்தளம் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.

ஆகவே, வெளிநாடுகளில் இருந்து வருகை தந்து புத்தளம் மாவட்டத்தில் வசிப்போர் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உளவுத் துறையினர், பொலிஸார்  இது குறித்து களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சினால் வழங்கப்படும் ஆலோசனைகளை பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் வீடுகள் பாதுகாப்பு படையினரால் அடையாளப்படுத்தப்படவுள்ளது.

குறித்த வீடுகளுக்கு விசேட ஸ்டிக்கர்களை ஒட்டுவதனூடாக கிராமத்திலுள்ள ஏனையவர்கள் அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.