பரிசோதனைகளின் பின்னர் மட்டக்களப்பில்  இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு – அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாரஞ்சினி கணேசமூர்த்தி தெரிவித்தார்.

சுமார் 61 வயது மதிக்கத்தக்க இந்த கொரோனா தொற்றாளி கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இலண்டனில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து தங்கியிருந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது

இந்த நோயாளி மட்டக்களப்பு நகரில் தங்கியிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 16.03.2020 சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக அங்கொடை ஐ.டி.எச் வைத்தியசாலையக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பணிப்பாளர் கலாரஞ்சனி மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த நபர் தங்கியிருந்த வீடு அவருடன் பழகிய நபர்கள் அவர் சென்று வந்த இடங்கள் இனங்காணப்பட்டு, அங்குள்ளவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நபர் மட்டக்களப்பு நகர பிரதேசத்தினை சேர்ந்தவர் என்பதன் காரணமாக மட்டக்களப்பு மக்கள் கொரோனா தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் அவதானத்தை மேலும் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.