கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் விசேட செயலணியொன்றை சுகாதார அமைச்சுடன் இணைந்து அமைத்துள்ளதாக நிதியத்தின் தலைவர் அருள்சாமி பரத் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாடு முகங்கொடுத்துள்ள நிலையில் பெருந்தோட்டப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு பொறிமுறைகள் குறித்து அவர் கருத்து வெளியிடுகையில்,

கொரோனா வைரஸ் பாதிப்பு முழு உலக நாடுகளையும் அச்சுறுத்தியுள்ளது. இலங்கையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்திவருவதால் நேற்று 16 ஆம் திகதிமுதல் 19 ஆம் திகதிவரை பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் மக்கள் வெளியில் செல்லாது அவதானமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தினர், சுகாதாரத்துறை மற்றும் துறைசார் அனைத்து தரப்புகளுடனும் இணைந்து நாட்டை பாதுகாப்பதற்கான பொறிமுறைகளை வகுத்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரைக்கமைய பெருந்தோட்டப் பகுதிகளில் இந்நோய் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முறையான விழிப்புணர்வுகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு பெருந்தோட்ட பிரதேசங்களிலும் இளைஞர் அணிகளை கொண்ட குழுக்கள் செயற்பாட்டில் உள்ளன. இவர்கள் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், விழிப்புணர்வுகளையும் மேற்கொள்கின்றனர்.

அதற்கு மேலதிகமான பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் சுகாதார அமைச்சுடன் இணைந்து இங்குள்ள மக்களின் சுகாதார நலன்களை பேணுவதற்காக விசேட செயலணியொன்றை அமைத்துள்ளது.

கண்டி, நுவரெலியா, ஹட்டன், பதுளை, இரத்தினபுரி, கேகாலை உட்பட அனைத்து பிரதேசங்களிலும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் சுகாதார பிரிவின் வைத்தியர்கள் உள்ளனர்.

இவர்களுடன் நேரடியாக கலந்துரையாடல்களை நடத்த முடியும். அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட இலக்கத்துடன் தொடர்புக்கொள்ள முடியாதவர்கள் இந்த வைத்தியர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமது சுகாதார நலன்களை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

அத்துடன், நிதியத்தின் சமூக நலன்புரி அதிகாரி அனைத்து பெருந்தோட்ட பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்வார். இவர்கள் எவ்வாறு சுகாதார முறைகளை பேணுவது என்பது தொடர்பில் காட்சிப்படுத்தல்களை மேற்கொள்வர். நோய் பரவாதிக்கும் பாதுகாப்பு பொறிமுறையை நாம் செய்துவருகின்றோம்.

இது தோட்டப்பகுதிக்கு மாத்திரம் அல்லது அனைத்துப் பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. நாடு ஒரு நெருக்கடியான நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. அதனால் மலையக இளைஞர்கள் நாட்டினுடைய மற்றும் தமது சமூகத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய முன்னின்று செயற்பட வேண்டும். 0775728552 (கண்டி – கல்யாணி), 0757634956 (கிரிஷானி – நுவரெலியா), 0773411513 (பிரமூத் - ஹட்டன்), 0712612008( சித்சர – பதுளை) 0718487471 (கோசல - இரத்தினபுரி), 0773452909( மனோரி – காலி) ஆகிய இலக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

சிலர் போலியான செய்திகளை பரப்பிவருகின்றனர். அவற்றை இனங்கண்டு இல்லாதொழிக்க வேண்டும். நாம் பொறுப்புடன் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்துதவ வேண்டும். அனைவருடைய வாழ்க்கையும் இதில் தங்கியுள்ளது. ஆகவே, இளைஞர்கள் முன்வந்து அணிதிரண்டு இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.