யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் வழக்கு விசாரணைகளை இணைய காணொளி ஊடாக இன்று முதல் நடத்தப்படுகின்றது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பல சேவைகள் அரசாங்கத்தினால் மட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நீதித்துறையும் இரு வாரங்களுக்கு அரசினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு பார்வையாளர்கள் வருவதற்கும்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிலையில் யாழ்ப்பாண சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் வழக்கு விசாரணைகளை இன்றுமுதல் நீதிபதிகள் இணைய காணொளி ஊடாக நடத்துகின்றனர். அதற்கான சகல ஏற்பாடுகளையும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

மேலும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு புதிதாக கொண்டுவரப்படும் கைதிகள் அனைவரும் சிறைச்சாலையின் வாயிலில் வைத்து சுத்தம் செய்யப்பட்டு கைகள் நன்றாக கழுவப்பட்டு அவர்களின் உடல் நிலைகள் சோதனை செய்யப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.