உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு, மக்களிற்கு பலத்த பாதுகாப்பினை வழங்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அந்தவகையில், தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுள் 548 பேர் இதுவரையில் பதிவுசெய்திப்பதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்களை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பை விடுத்திருந்தது.

தொலைபேசி ஊடாக இந்த தகவல்களையும், பதிவுகளையும் மேற்கொள்ள முடியும் என்றும் நாம் அறிவித்திருந்தோம். இதற்கு அமைவாக 3,000 ற்கு மேற்பட்ட தகவல்களும் எமக்கு கிடைத்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு மேலதிகமாக இந்த தகவல்களையும், பதிவுகளையும் மேற்கொள்வதற்காக 5 விசேட தொலைபேசி இலக்கங்களும் மின்னஞ்சல் முகவரி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

தொலைபேசி இலக்கங்கள்: 0112444480 / 0112444481 / 0115978720 / 0115978730 / 0115978734.

மின்னஞ்சல் முகவரி : lahd@police.lk  

இந்த பதிவுகள் தொடர்பாக வெளிநாட்டு தூதரகமும் எம்முடன் தொடர்புகொண்டு தகவல்களை கேட்டறிகின்றன. இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்கள் இந்த பதிவுகளை மேற்கொண்டால் அவர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்கு வசதியாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.