அமெரிக்காவில் கொரோன வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கினை நடத்தும் விதத்தில்   பாரிய மாற்றங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள அதிகாரிகள் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொள்வதை தடுப்பதற்காக அவற்றை நேரடி ஒளிபரப்பு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் நோய்தவிர்ப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இறுதிசடங்குகளை மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்களுடன் நடத்தவேண்டும்,அனைவருக்கும் அதனை நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் அமெரிக்காவின் நோய்தவிர்ப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலில் இருந்து நோய் கிருமிகள் ஏனையவர்களிற்கு தொற்றும் என்பதற்காக இந்த வேண்டுகோளை விடுக்கவில்லை அதற்காக ஆதாரங்கள் இல்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

மாறாக மக்கள் தங்களை சமூகரீதியில் தனிமைப்படுத்திக்கொள்வதை ஊக்குவிக்கவே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இறுதிசடங்கினை  நடத்த திட்டமிட்டால் , அதற்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறையுங்கள் நேரடி ஒளிபரப்பு வசதியை பயன்படுத்துங்கள் என அமெரிக்காவின் நோய்தவிர்ப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தின் மருத்துவர் டேவிட் பிரென்டெஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே அமெரிக்காவில் இறுதி சடங்கினை நடத்தும் நிலையங்கள் தங்கள் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துள்ளன.

போக்குவரத்து தடை விதிக்கப்பட்டவேளை பாஸ்டர் ஒருவர் வெப்காம் மூலம் மரணச்சடங்கினை முன்னெடுத்தார் என ஒருவர் தெரிவித்துள்ளார்.