(நா.தனுஜா)

ஈஸ்டர், ரம்ஸான், தமிழ் சிங்களப் புத்தாண்டு ஆகிய பண்டிகைகள் இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளதுடன், பொதுத்தேர்தலுக்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.

எனவே அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சுகாதாரம் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் பிரதானிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, பேச்சுவார்த்தை நடத்தி, கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான பொதுவான செயற்திட்டமொன்றைத் தயாரிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு முகங்கொடுப்பதே எமக்கு முன்னால் உள்ள பாரிய சவாலாகும். வைரஸ் தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்துவதும், முற்றாகத் தடுப்பதுமே அவையாகும்.

இது தேசிய ரீதியிலான நெருக்கடி நிலையாகும். எனினும் இதன் பாரதூரத்தன்மை இன்னமும் பலருக்குப் புரியவில்லை என்பதை எம்மால் உணரமுடிகிறது. தற்போது இந்த மோசமான தொற்றுநோய் இலங்கையில் பரவிவிட்டது. இனி அதனை எம்மால் தடுக்கமுடியாது. ஆனால் வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படத்தக்க பாதிப்பைக் குறைத்துக்கொள்வதற்காக நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இச்சவாலை எதிர்கொள்வதற்கான பொதுவான செயற்திட்டமொன்றை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்தவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நான் அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தேன். அதுமாத்திரமன்றி இம்மோசமான நிலை குறித்து அவதானம் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடமும் வேண்டுகோள் விடுத்திருந்தேன். 

அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துமாறு முன்னாள் சபாநாயகர் பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறார்.

இச்சந்தர்ப்பத்தில் நாம் முக்கியமான அவதானம் செலுத்தவேண்டிய சில விடயங்கள் உள்ளன. கொரோனா வைரஸ் தொற்று தற்போது சீனாவிலிருந்து ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை நோக்கிப் பரவிக்கொண்டிருக்கிறது. உலகில் பொருளாதார ரீதியில் முன்னணி நகரங்களான லண்டன் மற்றும் பாரிஸ் ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றின் மத்திய நிலையமாகக் கூடிய வாய்ப்புக்களும் ஏற்பட்டுள்ளமை குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும்.

அத்தோடு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எம்மிடம் குறைந்தளவான சுகாதார மருத்துவ வசதிகளே காணப்படுகின்றன. சுவாசத்தை இலகுவாக்குவதற்கான இயந்திரங்கள் எம்மிடம் போதியளவில் இல்லை.

வைரஸ் தொற்று பரிசோதனைக்கான வசதிகளும் குறைவாகவே உள்ளன. இவற்றின் காரணமாக வைரஸ் தொற்று ஏற்படும் வீதம் அதிகரிக்குமானால் பாரியதொரு நெருக்கடிநிலைக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என அவர் இதன்போத தெரிவித்தார்.