நாட்டிற்குள் வெளிநாடுகளில் இருந்து குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் வந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு நேரடியாக சென்று பதிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை எனவும் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளதாவது,

எவரேனும் நபரொருவர், மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரையிலான காலத்திற்குள் ஐரோப்பா, ஈரான் அல்லது தென் கொரியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்திருப்பின் அவர்களை  அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளுமாறு நேற்றைய தினம் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

எனவே, நேரடியாக பொலிஸ் நிலையத்திற்கு சமுகமளிக்கத் தேவையில்லையெனவும் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பதிவு செய்து கொள்வது அவசியமானதொன்று என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பா , ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் உடன் தம்மை பதிவு செய்துகொள்ள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பா , ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்குச் சென்று இம்மாதம் முதலாம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நாட்டுக்கு வருகை தந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 119 என்ற பொலிஸ் அவசர சேவை தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு தம்மைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தனிநபர்களதும் சமூகத்தினதும் நலனுக்காக இவ்வாறானவர்கள் தம்மைப் பதிவு செய்து கொள்வது அத்தியாவசியமானதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு முரணாகச் செயற்படுபவர்களுக்கு எதிராக தொற்றுத் தடைக்காப்பு சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.