தமிழ் மக்­க­ளுக்­கான ஒரு இடைக்­கால தீர்வுத் திட்­டத்தை நாம் நல்­லாட்சி அர­சாங்­கத்­துடன் இணைந்து கொண்டு வந்தோம். அதை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிப்­ப­தற்­கான ஆயத்­தங்­களை செய்து கொண்­டி­ருக்­கை­யி­லேயே அத்­திட்­ட­மா­னது தனி நாடு கோரிக்­கையை வலுப்­ப­டுத்­து­கி­றது என்ற தவ­றான எண்­ணக்­கரு அப்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு எடுத்­துக்­கூ­றப்­பட்­டது. அதன் கார­ண­மா­கவே ஜனா­தி­பதி திடீ­ரென அர­சியல் நெருக்­கடி ஏற்­படும் வகையில் புதிய பிர­த­மரை நிய­மித்து பாரா­ளு­மன்­றத்­தையும் கலைப்­ப­தற்கு தீர்­மா­னித்தார்.

அதன் பிறகு ஏற்­பட்ட அர­சியல் கொந்­த­ளிப்­புகள், நாட்டின் பெரும்­பான்மை மக்­களின் மன­மாற்றம் என்­ப­னவே  எமது தீர்வுத் திட்­டத்தை எவ்­வ­கை­யிலும் கொண்டு வரா­ம­லாக்­கி­யதே ஒழிய, நாம் பாரா­ளு­மன்றில் வீணே அமர்ந்­தி­ருந்து காலம் கடத்­த­வில்லை. அதேவேளை, சுதந்­தி­ரத்­துக்கு பின்னர் பிர­தான தேசியக் கட்­சி­களை முதன் முறை­யாக ஒன்­றி­ணைத்து நல்­லாட்சி ஒன்றை உரு­வாக்­கிய செயற்­பா­டு­களில்  எமக்கு பெரும்­பங்­கி­ருந்­தது என தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். எதிர்­வரும் பாரா­ளு­மன்றத் தேர்தல், ஜெனீவா விவ­காரம் மற்றும் சம­கால அர­சியல் நிலை­மைகள் பற்றி  வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு அவர் வழங்­கிய நேர்­காணல் வருமாறு:

கேள்வி: எதிர்­வரும் பாரா­ளுமன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வியூகம் எப்­ப­டி­யா­னது?

பதில்: எமது கட்­சி­யி­னது தேர்தல் அறிக்­கையில் வெற்றி பெறு­வ­தற்­கான வியூகம் உள்­ளது. அந்த அறிக்­கையில் பிர­தா­ன­மாக தமிழ் மக்­களின் இனப்­ பி­ரச்­சி­னைக்கு கடந்த 70 வரு­டங்­க­ளாக தீர்வு காணப்­ப­ட­வில்லை என்ற விடயம் முக்­கி­ய­மா­னது. யுத்த காலப்­ப­கு­தி­யிலும் அதற்குப் பின்­னரும் தீர்­வுகள்  முன்­மொழி­யப்­ப­ட­வில்லை. இடம்­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் கூட இது குறித்து எவரும் கதைக்­க­வில்லை.

முக்­கி­ய­மாக புதிய ஜனா­தி­ப­தி­யாக தெரி­வா­னவர்  இந்த நாட்டில் ஒரு யுத்தம் இடம்­பெற்­ற­தா­கவோ அல்­லது இலட்­சக்­க­ணக்­கானோர் மர­ணித்­த­தா­கவோ  காட்­டிக்­கொள்­ள­வில்லை. அப்­படி சம்­பவம் இடம்­பெற்­றதைப் பற்றி ஒன்றும் பேசாது அவர் ருவன்­வெ­ளி­சா­யவில் பதவிப் பிர­மாணம் செய்து கொண்டார். அதன் பிறகு அவர் தனது கொள்கைப் பிர­க­டன உரையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றின் தேவை­யையும் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை பலப்­ப­டுத்த வேண்­டிய கட்­டா­யத்­தையும் வலி­யு­றுத்­தினார். ஆனால் கடந்த காலங்­களில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்­ட­வர்கள் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறையை ஒழிப்போம் என்று தான் ஆத­ரவை கேட்­டி­ருந்­தனர்.

ஆனால் இவரோ பெரும்­பான்­மைத்­து­வத்தை பிர­தா­ன­மாகக் கொண்டு ஆட்சி நடத்தப் பார்க்­கின்றார். பெளத்த சிங்­கள மக்­களின் ஆணைப்­படி ஒற்­றை­யாட்­சியே தனது இலக்கு என்­கிறார். தேர்­த­லுக்கு முன்­னரும் பின்­னரும் ஏன் இந்த நாட்டில் இனப்­பி­ரச்­சினை தோன்­றி­யது, அதற்கு கார­ண­கர்த்­தாக்கள் யார் என்­பது பற்­றி­யெல்லாம் அவர் பேசி­யி­ருக்­க­வில்லை. இப்­ப­டி­யான கொள்­கைகள் கொண்ட ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக இருப்­ப­தா­னது தமிழ் மக்­க­ளுக்கு ஒரு சவா­லான விட­ய­மாகும். ஆகவே இவ்­வா­றான சவால்­களை வெற்றி கொள்­வ­தற்கு நாம் அதற்­கேற்ற தேர்தல் வியூ­கங்­களை வகுத்து பாரா­ளு­மன்றில் அழுத்­தங்கள் கொடுக்க வேண்­டிய சூழ்­நி­லைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். அந்த வகையில் தமிழ் மக்­க­ளுக்­கான பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிப்­ப­திலும் தக்க வைத்­துக்­கொள்­வ­திலும் நாம் முனைப்­பாக செயற்­பட வேண்­டி­யுள்­ளது.

கேள்வி: பெரும்­பான்மை மக்கள் தற்­போ­தைய ஜனாதிபதிக்கு ஆத­ர­வாக இருக்கும் நிலையில்  உங்கள் முயற்சி வெற்றியளிக்­குமா?

பதில்: தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு பாரா­ளு­மன்றில் பெரும்­பான்மை இல்லை. ஆகவே நாம் ஜன­நா­யக ரீதியில் மக்­களின் வாக்­கு­க­ளைப்­பெற்று அவர்  கொண்டு வரப்­போ­வ­தாகக் கூறும் சிங்­கள பெளத்த மக்­களை திருப்­திப்­ப­டுத்­தக்­கூ­டிய அர­சி­ய­ல­மைப்பு மற்றும் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை நீக்கும் செயற்­பா­டு­க­ளுக்கு எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­துவோம். எவ்­வா­றா­யினும் தற்­போ­தைய ஜனா­தி­ப­திக்கு மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை கிடைப்­ப­தற்கு வழி­க­ளில்லை. நாம் பிர­தா­ன­மாக மூன்று விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே எமது தேர்தல் வியூ­கங்­களை வகுத்­துள்ளோம். முத­லா­வது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு, நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைக்கு எதிர்ப்பு, இறு­தி­யாக சிறு­பான்மை மக்­க­ளுக்கு நிரந்­தர தீர்­வொன்றை பெற்­றுத்­தரும் அர­சி­ய­ல­மைப்பு.

கேள்வி: எதன் அடிப்­ப­டையில்  கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளிக்க முன் வந்­தது?

பதில்: சுதந்­தி­ரத்­துக்­குப்­பி­றகு நீங்கள் பார்த்­தீர்­க­ளானால், தேசியக் கட்­சி­களில் இரண்டு பிரதான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும்  ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகிய இரண்டு மட்­டுமே  மாறி மாறி ஆட்­சி­ய­மைத்து வந்தன.  இவை மாறி மாறி தமக்குள் முரண்­களை கொண்டே ஆட்­சியை கொண்டு நடத்­தின. ஆளுங்­கட்சி   கொண்டு வரும் திட்­டங்­களை எதிர்க்­கட்சி எதிர்த்தல் அல்­லது ஆத­ரவு தரா­ம­லி­ருத்தல் போன்ற அம்­சங்­களே நடந்­தே­றின. இதில் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வு­களும் இடம்­பெற்­றி­ருந்­தன. இந்­நிலையில் சுதந்­தி­ரத்­துக்­குப்­ பின்னர் இலங்கை அர­சியல் வர­லாற்றில் பிர­தான எதிர்க்­கட்­சிகள் இரண்டும் இணைந்து நல்­லாட்­சியை உரு­வாக்க நாமும் பங்­கு­தா­ரர்­க­ளானோம்.

அந்த ஆட்­சிக்கு இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்க வேண்டும் என்ற அடிப்­ப­டை­யான எண்ணம் இருந்த கார­ணத்­தி­னா­லேயே நாம் ஆத­ரவை வழங்­கினோம். அக்­கா­ல­கட்­டத்தில் அது முக்­கி­ய­மா­ன­தாக எமக்கு இருந்­தது. அதே வேளை பாரா­ளு­மன்றில் ஒரு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கக் கூடிய மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்மை பலமும் இருந்­தது. அப்­ப­டி­யா­ன­தொரு சூழ்­நி­லை­யி­லேயே நாம் அர­சாங்­கத்­துடன் இணைந்து பத்து பேர் கொண்ட நிபுணர் குழுவால் இனப்­ பி­ரச்­சி­னைக்­கான இடைக்­கால தீர்வுத் திட்­டத்தை தயா­ரித்தோம். 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்­தது. அதேவேளை 7 ஆம் திகதி இந்த தீர்வுத் திட்டம் பற்­றிய அறிக்கை  பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்க ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. எனினும் தனக்கு அதி­கா­ர­மில்­லாத நிலையில் அப்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன,  ஒக்­டோபர் மாதம் 26 ஆம் மஹிந்­தவை பிர­த­ம­ராக்கி பின்னர் பாரா­ளு­மன்­றத்­தையும் கலைத்தார்.

இதன் கார­ண­மாக அந்த தீர்வுத் திட்­டமும் அது குறித்த அறிக்­கையும் சமர்ப்­பிக்­கப்­ப­டா­ம­லேயே போனது. மைத்­தி­ரியின் இந்த செயற்­பாட்­டுக்குக் காரணம் அந்த அறிக்­கையில் ஒரு­மித்த நாடு என்ற பதம் ஒரு சமஷ்டி ஆட்­சியை ஒத்­த­தாக இருப்­ப­தா­கவும் இது நாட்டை பிளவு­ப­டுத்தும் என்றும் ராஜபக் ஷாக்­க­ளினால் கூறப்­பட்­ட­தாகும். அந்த வகையில் தற்­போ­தைய ஜனா­தி­பதி கோத்­தா­பய , ஜன­நா­யக விரோ­தப்­போக்­கோடு ஒரு அர­சியலமைப்பை கொண்டு வரு­வ­தற்கு எத்­த­னிக்­கிறார். இது ஒரு பாசிஸ ஆட்­சிக்கு சம­மா­ன­தாகும். எமக்கு ஜன­நா­ய­கத்தின் மீது நம்­பிக்கை இருப்­பதால் அதை நிறை­வேற்ற முடி­யாத அள­வுக்கு அழுத்­தங்­களை கொடுக்க பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் அவ­சி­ய­மா­கின்­றது.

கேள்வி:  நீங்கள் கூறும் பாசிஸ ஆட்சியை இல்­லா­தொ­ழிக்க தமிழ்த் தேசிய கூட்­ட­ணியின் செயற்­பா­டுகள் மட்டும் போது­மா­னதா?

பதில்:  நாம் பிர­தா­ன­மாக கொண்­டுள்ள கொள்­கையை இந்த நாட்டில் ஜன­நா­ய­கத்தை விரும்பும்  அனைத்து கட்­சி­களும் கொண்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக சிறு­பான்மை தமிழ் மற்றும் முஸ்லிம் கட்­சி­களும் இந்த நோக்­கத்­து­ட­னேயே பய­ணிக்க விரும்­பு­கின்­றன. நாம் தனி­யாக போட்­டி­யிட்­டாலும் தேர்­த­லுக்­குப்­ பின்னர் ஜன­நா­ய­கத்தை நேசிக்கும் அனை­வரும் ஒன்­றி­ணைவோம் என்­பதே உண்மை. எமது பிர­தான நோக்­கமே ஜன­நா­யக விரோத போக்கை கொண்­டி­ருக்கும் ஆட்சி பாரா­ளு­மன்றில் உரு­வாகி விடக்­கூ­டாது என்­ப­தாகும். அதற்கு அனைத்து கட்­சி­க­ளையும் ஒன்­றி­ணைத்து எமது எதிர்ப்பை காட்­டுவோம். அது போராட்­ட­மா­கவும் கிளர்ச்­சி­யா­கவும் இருக்­கலாம். சர்­வா­தி­கார ஆட்­சியை வெறுக்கும் எதிர்க்கும் அர­சியல் கட்­சிகள் உறுப்­பி­னர்கள் மட்­டு­மன்றி, நாட்­டி­லுள்ள மக்­க­ளையும் நாம் இதில் ஒன்­றி­ணைப்போம். மட்­டு­மன்றி சர்­வ­தே­சத்தின் உத­வி­யையும் இவ்­வி­ட­யத்தில் நாம் நாடுவோம்.  

கேள்வி: சர்­வ­தே­சத்தின்   பொறுப்புக் கூறல் செயற்­பா­டு­க­ளி­லி­ருந்தே ஜனாதிபதி இலங்­கையை விலக்­கிக் ­கொண்­டிருக்­கின்­றாரே?

 பதில்: அது தமி­ழர்­க­ளுக்கு சாத­க­மான நிலை­மையை தானே தோற்­று­வித்­தி­ருக்­கின்­றது. மனித உரிமை பேர­வையின் 47 அங்­கத்­துவ நாடு­களும் பொறுப்புக் கூறலை வலி­யு­றுத்­து­கின்­றன. பொறுப்புக் கூறும் விடயத்தில் இலங்கை சார்­பாக கொண்டு வரப்­பட்ட தீர்­மா­னங்­க­ளி­லி­ருந்து அது வில­கிக்­கொண்­டி­ருப்­ப­தா­னது சர்­வ­தேச ரீதி­யாக இந்த அர­சாங்­கத்தை அடை­யாளம் காட்­டி­யுள்­ளது.  எந்த அர­சாங்கம் வந்­தாலும் ஆட்­சியில் ஜன­நா­யகப் பண்­புகள் மற்றும் பொறுப்புக் கூறல் இருக்க வேண்டும் என்று எதிர்­பார்த்­தன. அந்த அடிப்­ப­டை­யி­லேயே 34 தீர்­மா­னங்­களை 2015 ஆம் ஆண்டில் கொண்டு வந்து நிறை­வேற்­றின. தற்­போது அவை நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­ப­தனால் சர்வ­தேச ரீதி­யாக இந்த அரசின் மீது நட­வ­டிக்கை எடுக்க வழி­வ­குக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி:  இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணும் விட­யத்தில் இந்தியாவின் பங்களிப்பை எவ்­வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: இந்­தி­யாவின் பங்­க­ளிப்பும் ஒத்­து­ழைப்பும் இன்­றி­ய­மை­யா­தது. ஏனென்றால் இலங்கை இனப் ­பிரச்­சினை விவ­கா­ரத்தில் இந்­தியா தலை­யிட்­டி­ருக்­கின்­றது, உடன்­ப­டிக்­கை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­தி­யா­வுக்கு உள்ள பொறுப்பு என்று கூட கூறலாம். ஆதலால் தான் ஜனா­தி­பதித் தேர்தல் முடிந்­த­வுடன் இந்­தியா வெளி­வி­வ­கார அமைச்­சரை அனுப்பி இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­படல் வேண்டும் என வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது.

அதன் பின்னர் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் இரு­வ­ரையும் இந்­தியப் பிர­தமர் சந்­தித்து அது பற்றி பேசி­யி­ருந்தார். ஆனாலும் கூட அந்த விட­யத்­திலும் அர­சாங்கம் பொறுப்புக் கூற­லி­லி­ருந்து தவறி அதற்கு விரோ­த­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. எனினும் நாம் இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் இந்­தி­யா­வையும் இணைத்தே பயணிக்­க­வுள்ளோம்.

கேள்வி: எனினும், கடந்த நல்லாட்சி காலத்தில்  கூட்­டமைப்பு காத்திரமான எந்த விட­யங்களையும் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு  உள்­ளதே?

பதில்: அப்­ப­டி­யி­ருக்க, வாய்ப்­புகள் இல்லை. ஏனென்றால்  நாம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­சத்தை மீள்­கட்­ட­மைக்க பொரு­ளா­தார ரீதி­யான உத­வி­களை நல்­லாட்சி அர­சாங்­கத்­திடம் கேட்­டி­ருந்தோம். இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான ஆரம்ப கட்ட தீர்வை  தயா­ரித்­தி­ருந்தோம். முக்­கி­ய­மாக 2017 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்­டத்தில் வடக்கு கிழக்கு அபி­வி­ருத்­திக்­காக முன்­னெப் ­பொழுதும் இல்­லாத அள­வுக்கு நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

எம்மை அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்க அவர்கள் அழைத்­தாலும் நாம் அதில் அங்கம் வகிக்­கா­ம­லேயே போரினால் அழிந்து போன ஒரு தேசத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கு­ரிய அமைச்சு ஒன்றை பிர­தமர் தலை­மையில் உரு­வாக்­கி­யி­ருந்தோம். அதன் மூலம் பல அபி­வி­ருத்தித் திட்­டங்கள் இங்கு இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. எவரும் இல்லை என்று கூற முடி­யாது. தமிழ் மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்கும் விதத்தில் நாம் என்ன செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றோமோ அல்­லது பேசு­கி­ன்றோமோ அதை அவர்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றனர்.

உதா­ர­ண­மாக இடம்­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது எவ்வாறு, ஏன் கோத்­தா­ப­ய­வுக்கு எதிராக வாக்­க­ளிக்க வேண்டும் என நாம் அவர்­க­ளிடம் விளக்­கி­யி­ருந்தோம். அந்த அடிப்­ப­டையில் அவர்கள் வாக்­க­ளித்­தி­ருந்­தனர்.  சஜித் பிரே­ம­தாஸ இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்து கொண்­டி­ருந்த யோச­னைகள் மற்றும் நல்­லாட்சி காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட பொரு­ளா­தார நட­வ­டிக்­கைகள் கார­ண­மா­கவே அவர்கள் எமது வார்த்­தை­க­ளுக்கு மதிப்பு கொடுத்­தனர்.

கேள்வி: சஜித் பிரே­ம­தா­ஸவுக்கு அதிகளவில் வாக்­க­ளித்த தமிழ் மக்களுக்கு அவர்  ஒரு நன்றியை தானும் தெரி­விக்­க­வில்லையே?  அவ­ரது அண்­மைக்­கால கருத்துகள் தமிழர்களுக்கு எதி­ராக இருக்கின்றனவே?

பதில்: அதை மனதில் கொண்­டி­ருக்­கிறோம். இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்கும் விட­யங்­களில் சஜித் அவரது தந்­தை­யைப்­போன்று இல்லை என்­பதை ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்டும். நீண்ட கால அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருப்­பவன் என்ற வகையில் நான் கூற வேண்­டி­யது என்­ன­வென்றால், அவ­ருக்கு இன்னும் அரசியல் பற்­றிய ஆழமான விட­யங்கள் குறித்த தெளி­வில்லை. ஆனால் நாம் அவ­ருக்கு விளங்­கப்­ப­டுத்த முயற்­சித்தோம்.

அண்­மைக்­கால­மாக அவ­ரது கருத்­துகள் அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வாக இருக்­கின்­றன. அதா­வது இரா­ணு­வத்­த­ள­ப­திக்கு அமெ­ரிக்­காவில் விதிக்­கப்­பட்ட தடையை அவரும் எதிர்த்து கருத்துத் தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் நான் அது­கு­றித்து பாரா­ளு­மன்றில் பேசி­யி­ருந்தேன். தமிழ் மக்­க­ளுக்கு எதிரான போக்கை தற்­போ­தைய அரசு கொண்­டி­ருக்­கின்­றது. அதே­வேளை எதிர்க்­கட்சித் தலை­வரும் அதற்கு சாத­க­மான போக்கை கொண்டு பேசுகிறார் என நான் பகி­ரங்­க­மாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன்.

ஆனால் இப்­போது நிலைமை வேறு. அறு­திப் ­பெ­ரும்­பான்­மை­யுடன் பாரா­ளு­மன்ற அதி­கா­ரத்தைப் பெற ஒரு போராட்டம் ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. இதில் சஜித் பிரே­ம­தா­ஸவும் சிங்­கள பெளத்த வாக்­கு­க­ளையும் அவர்­களின் ஆத­ர­வையும் பெறு­வ­தற்கு முயற்­சிக்­கிறார் என்­பதை நாம் அறிந்­துள்ளோம். தேர்த­லுக்­குப் ­பின்­னரும் கூட ஒரு­மித்த நாட்­டுக்குள் அதி­கா­ரங்­களை பகிர வேண்டும் என அவர் பேசி­யி­ருந்தார். இது அவர் ஆட்சி அதி­கா­ரத்தை கைப்­பற்­று­வ­தற்கு தேர்தல் காலங்­களில் மேற்­கொள்ளும் தந்­தி­ரோ­பா­யங்­க­ளாக கரு­தலாம்.

எனினும் சிங்­கள மக்­களும் தமது ஜன­நா­யக ரீதி­யான கட­மை­களை தேர்தல் காலத்தில் செய்­கின்­றனர். யாருக்கு அவர்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என்­பதை அறிந்­துள்­ளனர். எனவே சஜித் பிரே­ம­தாஸ, தேர்தல் காலத்தில் சிங்­கள மக்­களின் வாக்­கு­க­ளைப்­பெ­று­வ­தற்கு எடுக்கும் தந்­தி­ரோ­பாய முயற்­சி­க­ளையோ அல்­லது பேசும் வார்த்­தை­க­ளையோ கருத்திற் கொண்டு நாம் எமது வியூ­கங்­களை மாற்­றி­ய­மைக்க முடி­யாது. தேர்­தலில் வெற்றிப் பெற்ற பிறகு பாரா­ளு­மன்றில் நாமும் அதி­கா­ரத்தை கொண்­டி­ருப்போம். அத்­த­கைய சந்­தர்ப்­பத்தில் அவ்­வா­றா­ன­வர்­க­ளுடன் என்ன பேச வேண்டும் என்­பதை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு அறிந்தே உள்­ளது.

ஆர்.பி., சி.சி.என்.