நான் வைத்த புள்ளி அரசியல் சுனாமியாக  மாறும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சென்னையில் தனியார் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றி ரஜினிகாந்த் மேலும்  தெரிவித்ததாவது,

“அரசியலில் அலை முக்கியம். அதனால் தான் அலை உண்டாக வேண்டும். இயக்கம் உருவாக வேண்டும் என்றேன். உடனே ‘இவர் வரமாட்டாரா..?’ என கேட்கின்றனர். எனவே ஒரு விடயத்தை சொல்ல நினைக்கிறேன்.

சினிமாவிலிருந்து வந்த எம்.ஜி.ஆர். முதல்வரானார். அவர் 25 ஆண்டுகள் தி.மு.க.வில் இருந்தார்.  நல்லவர். நிறைய உதவிகள் செய்துள்ளார். கருணாநிதி முதல்வராக அவரும் மிகப்பெரிய காரணமாக இருந்தார். தி.மு.க.வின் பொருளாளராக இருந்த அவர், கணக்கு கேட்டதற்காக கட்சியில் இருந்து நீக்கினார்கள். 

அவராக ராஜினாமா செய்து வெளியே சென்றிருந்தால், அது சரியாக இருந்திருக்காது. அவரை வெளியேற்றிய பின்னர், என்ன தவறு செய்தேன்? கணக்கு கேட்டது தப்பா? என கேட்டார். அது அனுதாப அலையாக மாறியது. முதல் முறையாக தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.

 அதற்கடுத்து 1991ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியோடு ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் தி.மு.க.விற்கு எதிரான அலை வீசியது. முதன் முறையாக ஜெயலலிதா வெற்றி பெற்றார்.

ஆந்திராவில் ஒரே ஆண்டில் மூன்று முதல்வர்களை இந்திராகாந்தி மாற்றினார். அதனால் ஆந்திராவில் தெலுங்கர் தான் ஆள வேண்டுமென்று என்டி ராமராவ் கட்சி தொடங்கினார். அலை உருவானது. அவர் முதல்வரானார். எனவே அலை முக்கியம்.

சில நாட்களுக்கு முன் நான் ஒரு புள்ளி வைத்தேன். அரசியலில் புது புள்ளி வைத்தேன். அந்த புள்ளி தற்போது அமைதியாக யாருக்கும் தெரியாமல் சூழலாக உருவாகி உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது. 

இது மக்கள் மத்தியில் உருவான சூழல். அதை வலுவானதாக மாற்ற, ரஜினி வந்தாக வேண்டும். ரஜினி ரசிகர்களும் வருவார்கள். அந்த அலை கரையை நெருங்க நெருங்க, தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும். அது ஆண்டவன் கையில் உள்ளது. 

அந்த ஆண்டவன் மக்களாகிய நீங்கள் தான். நீங்கள் தான் அதை உருவாக்க வேண்டும். அது உருவாகும். அப்போது அற்புதம் நிகழும். அதிசயம் நிகழும்.” என தெரிவித்துள்ளார்.